Friday, April 30, 2010

மகிந்தவுக்கு ஆதரவளிக்கும்படி இந்தியா அழுத்தம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு இணக்கம்!!


சிறிலங்காவின் அரசமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசதலைவர் மகிந்த மேற்கொண்டுள்ள திட்டங்களுக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்றும் மகிந்த இந்த ஆதரவரை வழங்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இந்தியா அழுத்தம் வழங்கியுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

இணைக்கப்படாத வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் காவல்துறை தவிர்ந்த அதிகாரங்களை பகிர்ந்தளித்து – மகிந்தவின் திட்டப்படி – தீர்வு பொதி ஒன்றை முன்மொழிந்து தமிழர் பிரச்சினைக்கு முடிவு ஒன்றை காணவேண்டும் என்று இந்தியா விரும்புவதாகவும் -

தீர்வு விடயத்தில் இன்னமும் காலத்தை இழுத்தடித்தால், அது புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சிறிலங்காவின் மீது அழுத்தங்களை அதிகரிப்பதற்கு ஏதுவாக அமைந்துவிடும் என்று இந்தியா கருதுவதாகவும் இந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

ஆகவே, சிறிலங்காவின் புதிய அரசு அரசமைப்பில் மாற்றங்களை கொண்டுவந்து அதிகாரப்பகிர்வு மூலம் தீர்வை வழங்குவதற்கு தேவையான நாடாளுமன்ற பலத்தை – மூன்றிலிரண்டு பெரும்பான்மையை – தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக வழங்குவதாக இந்திய தரப்பிலிருந்து சிறிலங்காவுக்கு உறுதியளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில் – புதிய அரசுடன் இணைந்து செயற்படுவதற்கு தாம் தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

புதிய அரசில் அங்கம் வகிக்கும் ஜாதிக கெல உறுமய மற்றும் வீமல் வீரவன்ச தரப்பு ஆகியவை, தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னர் அரசதலைவர் தேர்தல் காலப்பகுதியில் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தமைக்கு போர்க்கொடி தூக்கியபோதும், தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுடன் இணைந்து பணியாற்றுவதில் ஆட்சேபம் இல்லை என்று தெரிவித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவினை பெற்றுத்தருவது குறித்தும் அண்மையில் சிறிலங்கா – இந்திய தலைவர்களுக்கிடையிலான சந்திப்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment