Thursday, April 22, 2010

வடக்கு – கிழக்கில் புதிய தொழில் திட்டங்கள் – அமெரிக்கா


சிறிலங்காவில் உள்ள தனியார் துறையுடன் இணைந்து புதிய வர்த்தக கூட்டணி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது அனைத்துலக மேம்பாடுகளுக்கான அமெரிக்க நிறுவனம் [The United States Agency for International Development - USAID].

சிறிலங்காவில் வடக்கு மற்றும் கிழக்கில், பொது மற்றும் தனியார் தொழில் வாணிபக் கூட்டு என்ற திட்டத்தின் கீழ் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5000 முழு நேர பணியிடங்களை உருவாக்கும் வண்ணம் ஐந்து தொழில் துறைகளை தொடக்க திட்டமிட்டுள்ளது.

இது குறித்து சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள விரிவான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

இந்த ஐந்து கூட்டுத் தொழில் துறைகளும் சிறிலங்கா அரசு சார்பில்லாத தனியார் நிறுவனங்கள் மூலமே செய்யப்படும். சிறிலங்கா தனியார் துறை 1400 மில்லியன் ரூபாய்களும், அனைத்துலக மேம்பாடுகளுக்கான அமெரிக்க நிறுவனம் 600 மில்லியன் ரூபாய்களும் முதலீடு செய்யும். ஆக மொத்தமாக 2 பில்லியன் ரூபாய் முதலீடுகளில் ஐந்து தொழில் துறைகள் உருவாக்கப்படும்.

கடல் மற்றும் நன்நீர் மீன்கள் வளர்த்தல், ஆடைகள் தயாரிப்பு, உணவு விநியோகம், தோட்டப் பயிர்ச்செய்கை போன்ற வகையான தொழில் துறைகள் இவற்றில் அடங்கும்.

ஆடைகள் தயாரிப்பு கூட்டுத்தொழில்:

வடக்கு பகுதியில் உள்ள வவுனியாவிற்கு அருகில் ஓமந்தையில் ஆடை தயாரிக்கும் தொழிற்கூடம் ஒன்றை உருவாகுவதன் மூலமாக வடக்கு பகுதியில் உள்ள போரினால் பாதிக்கப்பட்ட இடங்கள் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலுள்ள இளம் விதவைகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு சுமார் 1000 வேலை வாய்ப்புக்களை ஆடை தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனம் அளிக்கும்.

மீன் வளர்ப்பு கூட்டுத்தொழில்:

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மீன் உற்பத்தியை பெருக்குவதற்காக சிறிலங்கா மீன்வளர்ப்பு நிறுவனத்திற்கும் அனைத்துலக மேம்பாடுகளுக்கான அமெரிக்க நிறுவனத்திற்கும் தொழில் கூட்டு ஏற்பட்டுள்ளது. மீன் விற்பனை வருவாய் மட்டுமன்றி உயர்தர கடல் உணவுகள் மூலமும் வருவாயை இரு மடங்காக திட்டமிடப்பட்டுள்ளது.

உற்பத்தியாளர்களுக்கும் வாங்குபவர்களுக்குமான தொடர்பை உண்டாக்குதல்:

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளின் விளைபொருட்களை விற்பனை செய்வதற்கான வழிமுறைகளை முன்னணி விநியோக நிறுவனம் ஆராய்ந்து அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும்.

இதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி விவசாயிகளுக்கு உற்பத்தி மற்றும் வருவாயிலும் உயர்வு ஏற்படும். சுமார் 1500 விவசாயிகள் மற்றும் மீனவர்கள் இதன் மூலம் பலனடைவர். யாழ்ப்பாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய குளிர் சேகரிப்பு மையங்கள் இதற்காக உண்டாக்கப்படும்.

வடக்கில் தோட்டக்கலை கூட்டுத்தொழில்:

சிறிலங்க தோட்டக்கலை நிறுவனத்திற்கும் அனைத்துலக மேம்பாடுகளுக்கான அமெரிக்க நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள உடன்பாட்டின்படி யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் நவீன முறைகளின் மூலமாக காய்கறிகள் மற்றும் பழ வகைகளின் உற்பத்தி பெருக்கப்படும். இத்திட்டத்தின் படி 1100 விவசாயிகள் பயனடைவர்.

No comments:

Post a Comment