Wednesday, April 28, 2010

கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் கனரக வாகனங்களை கொண்டு படையினரால் முற்றாக அழிப்பு!


யாழ்ப்பாணம் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தின் எச்சங்களைத் துடைத்து அழிக்கும் நடவடிக்கை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள், வரலாற்றுச் சான்றுகள், மாவீரர் நினைவிடங்கள் போன்றவற்றை முற்றாக அழிக்கும் நடவடிக்கையினை சிங்கள அரச படைகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

இதன் அடிப்படையில் யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடம், கற்சிலைமடுவில் அமைந்துள்ள பண்டாரவவுனியன் நினைவுத் தூபி, வன்னியில் அமைந்திருந்த அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்கள் என பெருமளவான நினைவுச் சின்னங்கள் அழிக்கப்பட்டு வந்தன.

இதன் தொடராக யாழ்ப்பாணம் கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தினை கனரக வாகனங்கள் கொண்டு அழிக்கும் நடவடிக்கள் தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துயிலும் இல்லம் உடைக்கப்படுகின்ற அதேவேளை, அங்கிருந்து உடைக்கப்படும் கற்கள் வேறொரு பகுதிக்கு வாகனங்கள் மூலம் படையினரால் ஏற்றிச் செல்லப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். உடைக்கப்பட்டதன் பின்னர் அந்த நிலப்பகுதியை மட்டப்படுத்தவும் படையினர் முனைவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு வவுனிக்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினை அழித்த படையினர் அங்கிருந்து மண்ணினை அகழ்ந்து வீதிகளில் கொட்டி வீதி அமைத்து வந்த வேளை அங்கு திரண்ட மல்லாவி மக்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு அந் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டிருந்தமை தெரிந்ததே.

இதே மாவீரர் துயிலும் இல்லத்தின் முகப்பின் மீது கடந்த தேர்தலின் போது ஒட்டுக் கட்சிகள் பரப்புரைச் சுரொட்டிகளை ஒட்டி இழிவு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தமை தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment