
![]() |
விடுதலைப் புலிகளை வெறிப் போர் மூலம் இல்லாமலே செய்துவிட்டு, அதிபர் தேர்தலில் மகுடம் சூட்டிய ராஜபக்ஷே, சமீபத்தில் நடந்து முடிந்த பிரதமர் தேர்தலிலும் வெற்றியை 'சாமர்த்தி யமாக' அள்ளியிருக்கிறார். மிச்ச சொச்சமாக எஞ்சி இருந்த கடைசி நம்பிக்கையும் கழன்று விழுந்த கணக்காக... ஈழ ஆர்வலர்கள் இப்போது இடிந்து போயிருக்கிறார்கள்! 'பிரபாகரன் வருவார்' என்று
அவர்கள் மத்தியில் இருந்த நம்பிக்கையும் மெள்ள மெள்ளத் தகர்வதாகவே தோன்றுகிறது. இந்த நிலையில்தான், 'ஈழத் தமிழர்களின் வாழ்வை மீட்க இனி வழியே இல்லையா?' என்கிற பரிதவிப்பு, 'நாடு கடந்த தமிழீழ அரசு' என்ற புதிய வடிவமாக உருமாறத் துவங்கியிருக்கிறது.
'பிரபாகரன் இனி வரமாட்டார்' என்பது திட்டவட்டமாகத் தெரிய வந்த பின்னர்தான், 'நாடு கடந்த தமிழீழ அரசு' என்ற இந்தத் திட்டம் உலகத் தமிழர்களின் புது இயக்கமாக வடிவெடுக்கத் துவங்கியிருப்பதாக பரபரப்பு!
இது சாத்தியமா?
பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து நாடு கடந்த தமிழீழம் அமைக்கும் முயற்சிகளில் இறங்கி இருக்கும் ஈழத் தமிழ் பிரமுகர்கள் சிலரிடம் பேசினோம். ''ஈழத் தந்தை செல்வா காலத்து அமைதி வழிப் போராட்டத்தை நசுக்கிய சிங்கள அரசு, புலிகளின் முப்பது வருட ஆயுதப் போராட் டத்தையும் பன்னாட்டு ராணுவ உதவியுடன் வீழ்த்தி விட்டது. போர்க் குற்றம் தொடர்பான பன்னாட்டு நெருக்கடிகளில் இருந்து நயவஞ்சகமாகத் தப்பிவரும் ராஜபக்ஷே அரசு, அடுத்த கட்டமாக ஈழத் தமிழ ரின் நிலங்களில் சிங்களக் குடியிருப்புகளைத் திணித்துக் கொண்டிருக்கிறது. தமிழர்களுக்கான வாழ்விடமே கிடையாது என்கிற நிலையை உண்டாக்கி, தனி ஈழம் என்கிற எண்ணமே தமிழ் மக்களிடம் எழாதபடி சிங்கள அரசு வேரறுத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில்தான், தற்போதைய புதிய முயற்சிக்கான இணைப்பாளராக இயங்கிவரும் விசுவநாதன் ருத்திரகுமாரன் யோசனைப்படி இலங்கையின் கொடுமைகள் குறித்த துல்லிய மான விவரங்களைத் திரட்ட தனிக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை யில், இலங்கை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு எவ்வித உயிர்ப் பாதுகாப்பும் இல்லை என்று உறுதிப் பட்டது. சிறுவர் - சிறுமிகளைக் குறிவைத்து அங்கே அரங்கேறும் கொடூரங்கள் பற்றி தெரிய வந்த தகவல்கள், நெஞ்சை அறுப்பதாக இருந்தது. இலங்கையின் வல்லூறுத்தனத்தை சர்வதேச அளவில் தோலுரித்துக் காட்ட வேண்டுமென்றால்... உலகம் முழுவதும் பிரதிநிதிகளை ஏற்படுத்தி... அவர்களை மொத்தமாகக் கொண்ட ஒரு புதிய தமிழர் அரசாங்கத்தையே ஏற்படுத்தியாக வேண்டும் என்ற உண்மை புலப்பட்டது. அதன்படியே நாடு கடந்த தமிழீழ அரசுக்கான சட்ட திட்டங்கள் வேகவேகமாக வகுக்கப்பட்டன.
இரண்டாம் உலகப் போரின்போது சார்ல்ஸ் டீ கோலினால் லண்டனில் செயல்படுத்தப்பட்ட அரசாங்கத்தைப் போன்றதுதான் நாடு கடந்த தமிழீழ அரசு. ஆனாலும், ஒரு தேசிய இனம் தனக்கென ஒரு நாடு கடந்த அரசாங்கத்தை முன்மொழிவது இதுவே முதல் முறையாகும். இந்தப் புதிய அரசை அமைத்து, அதன் மூலமாக ஈழத் தமிழருக்கான உரிமைகளையும் தேவைகளையும் உலக சமுதாயத்தின் முன்னால் எடுத்து வைக்க முடிவாகியுள்ளது. மக்கள்தொகை, பிரதிநிதிகளின் பலம் உள்ளிட்டவைகளைக் கணக்கிட்டு உலகின் பல்வேறு நாடுகளில் தேர்ந்தெடுக்க வேண்டிய பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் தீர்மானிக்கப்பட்டது. இதன் மூலம் ராஜபக்ஷே அரசுக்கு உண்டாகும் நெருக்கடி, நிச்சயம் புதிய தீர்வாக அமையும்!'' எனச் சொன்னவர்கள். நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான தேர்தல் வேலைகள் குறித்தும் விறுவிறுப்பாக விவரித்தார்கள்.
தேர்தலும் திருப்பமும்!
''1976-ல் இயற்றப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானத்தின்படி, தமிழர் ஒரு தேசிய இனம். வடக்கு, கிழக்கு தமிழர் தாயக நிலம், ஈழத் தமிழர்களின் தன்னாட்சி உரிமை உள்ளிட்ட அடிப்படைக் கோட்பாடுகள்தான் நாடு கடந்த தமிழீழ அரசின் ஆதார சுருதி. பன்னாடுகளைச் சேர்ந்த அசாத்திய திறமை படைத்த 12 பேர் நாடு கடந்த தமிழீழ அரசின் மதியுரைக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள். இலங்கையில் தமிழர்களுக்கு விரோதமாக நடக்கும் அத்தனை விதமான சித்ரவதைகளையும் ஆராய்ந்தறிந்து, சர்வதேச கவனத்துக்குக் கொண்டு வருவார்கள். மதியுரைக் குழுவின் பரிந்துரைகளுக்குத் தக்கபடி தமிழீழ அரசாங்கத்தை உருவாக்குவதற்கான தேர்தல்களும் நாடுவாரியாக நடத்தப்படவிருக்கின்றன. அதன்படி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையில் 135 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள் ஒரு ஜனநாயக நாட்டின் எம்.பி-க்கள் போலவே செயல்படுவார்கள். இவர்களில் 115 பிரதிநிதிகள் அந்தந்த நாடுகளில் உள்ள ஈழத் தமிழ் மக்களால் வாக்களிப்பு முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 20 பேர் தேர்தல் நடத்துவதற்கு சாத்தியமற்ற நாடுகளில் இருந்து நியமன முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் இந்தியாவிலிருந்து ஐந்து பேர் இப்படி நியமன முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதாக விசுவநாதன் ருத்திரகுமாரன் உள்ளிட்டவர்களால் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
வருகிற மே மாதம் 15-ம் தேதிக்குள் முதல் கட்டமாக நியமன உறுப்பினர்கள் தேர்வு முடிந்துவிடும். அதன்பிறகு உலகம் தழுவிய தமிழர் பிரதிநிதிகளுக்கான தேர்தல் நடக்கும். அதன் பிறகு ஒரு முழுமையான அரசாங்கத்துக்கான கட்டமைப்பு உருவாகிவிடும். இணையம், சாட்டிலைட் போன் என்று பரவியுள்ள இந்த தகவல் தொடர்பு யுகத்தில், பல்வேறு நாடுகளில் இருந்தபடியே இந்த அரசாங்கத்தை நடத்துவதும், அரசின் முடிவுகளை ஈழத் தமிழ் சமுதாயத்தின் பார்வைக்கு உடனுக்குடன் கொண்டு சென்று, பிரமாண்டப் போராட்டத்துக்கு அவர்களைத் தயார் செய்வதும் கடினமான காரியமாக இருக்காது!'' எனச் சொல்கிறார்கள் நம்பிக்கையோடு.
முதற்கட்ட முன்னெடுப்புகள்!
நாடு கடந்த தமிழீழ அரசின் முதற்கட்ட பணிகளைப் பட்டியலிட்டிருக்கும் நிர்வாகிகள், ''முகாம்களில் முடக்கப் பட்டிருக்கும் தமிழர்களை மீட்பதும், காணாமல் போனவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கான வாழ்க்கைக்கு வழி செய்வதும், கொலை செய்யப்பட்டோர், பாலியல் வல்லுறவுக்கு ஆளானோர் குறித்த விவரங்களை சேகரிப்பதும்தான் புதிய தமிழர் அரசாங்கத்தின் முதல் வேலை. அடுத்த கட்டமாக ஈழத் தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடமான இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பிரதேசப் பகுதிகள் சிங்கள மயமாவதைத் தடுப்பது, ஈழத்தின் விளை நிலங்கள் தொடங்கி கனிம வளங்கள் வரையிலான செல்வத்தை பாதுகாப்பது, தமிழ் சிறார்களுக்கு முறையான கல்வி புகட்டுவது, தமிழ் மொழியின் பண்பாட்டு அடையாளத்தை பாதுகாப்பது, ஐ.நா-வின் மனித உரிமை சாதனங்கள், மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பாக சர்வதேச உடன்படிக்கைகளின் வழியாக தமிழ் மக்களைப் பாதுகாப்பது உள்ளிட்ட முன்னெடுப்புகளையும் நாடு தழுவிய தமிழீழ அரசு உடனடியாகச் செய்யும்!'' என்று அறைகூவுகிறார்கள்.
இதர நாடுகளிலும் இந்தியாவிலும்...
நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்துக்காக உலகெங்கிலும் பிரதிநிதிகளைத் தேர்ந் தெடுக்க மே 17 மற்றும் 19 தேதிகளில் ஈழத் தமிழர்கள் வாழும் நாடுகளில்தேர்தல் நடைபெறும் என்று மதியுரைக் குழுவின் அறிக்கை சொல்லி இருக்கிறது. அதுகுறித்து அனுப்பப்பட்டுள்ள ஒரு அவசரச் சுற்றறிக்கை நம் பார்வைக்கும் வந்தது.
ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் கே.பி-யுடன் இணைந்து அமெரிக்கா வாழ் தமிழ் ஈழ வழக்கறிஞரான விசுவநாதன் ருத்திரகுமாரன் செயல்பட்டார். அப்போதே நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்துக்கான அடிப்படை விதைகள் போடப்பட்டது. 'இது எதையும் சாதிக்க முடியாத வெறும் வலைதள அரசு' என்று ருத்திரகுமாரனின் எதிர்ப்பாளர்கள் கூறிவந்த நிலையில்தான், 'பிரதிநிதிகள்... தேர்தல்...' என்றெல்லாம் மளமளவென வேலைகள் சூடு பிடித்துள்ளன. இதற்கென ஒரு சூறாவளிச் சுற்றுப் பயணம் செய்த ருத்திரகுமாரன் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளில் பல ஈழத் தலைவர்களையும், ஆதரவாளர்களையும் தன் பக்கம் ஈர்த்தாராம். இந்தத் தேர்தலில் ஈழத் தமிழர்கள் மட்டுமின்றி, இந்தியத் தமிழர்களும் போட்டியிடலாம் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகப் பேசப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து பத்து இடங்களுக்கும், கனடாவின் 25 இடங்களுக்கும் போட்டி மிக பலமாக இருக்கிறதாம். ருத்திரகுமாரனும் ஒரு பிரதிநிதி பதவிக்காக களத்தில் போட்டியிடுகிறார்.
இருப்பினும் வேட்பு மனுக்களின் இறுதிப்பட்டியல் மிக ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் வேட்பாளர் பட்டியல் வெளியாகக் கூடும் என்று தமிழ் ஈழ தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவுக்கான நியமன பதவிகள் ஐந்துக்கும் தமிழகத்தில் கடுமையான போட்டி இருக்கலாம். இதில் விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன், தமிழர் தேசிய இயக்கம் நெடுமாறன், சீமான் ஆகியோரிடமும் பேச்சு வார்த்தை நடத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
லண்டனில் தலைமையகம் இயங்குமாம் இந்த புதிய அரசாங்கத்துக்கு! இதன் அரசியல் நிர்ணய சபைக்கு தலைவர் அல்லது பொறுப்பாளர் என்ற பதவிக்கு ஒருவர் மொத்தமுள்ள 135 உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவாராம். பல்வேறு துறைகளுக்கும் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படலாம்.
'தமிழீழம் என்றாலே அது பிரபாகரனால் மட்டுமே சாத்தியம்' என்கிற எண்ணம் கொண்ட தமிழகத் தலைவர்களால் நாடு கடந்த தமிழீழ முயற்சிகளை எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ள முடியும் என்பதும் தற்போது ஒரு விவாதமாகக் கிளம்பியுள்ளது. 'பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்' என நெடுமாறன், வைகோ உள்ளிட்டவர்களும் அடித்துச் சொல்லிவரும் நிலையில், 'பிரபாகரன் இனி வரமாட்டார்' என்று சொல்லும் விதமாக நடக்கும் இந்த புது அரசாங்க ஏற்பாடுகள் புதிய சலசலப்புக்கு கட்டாயம் அடிபோடும்.
இதையெல்லாம் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கும் ருத்திரகுமாரன் நடவடிக்கைகளை ஊர்ந்து கவனிப்பர்கள், ''போர்க்காலத்தில் பிரபாகரனோடு தொலைபேசி வழி தொடர்பில் இருந்தவர்தான் ருத்திரகுமாரன். போரின் முடிவு சோகமானதாக அமைந்த பிறகு, அடுத்த கட்ட முன்னெடுப்புகளாக என்ன செய்ய வேண்டும் என்பது அப்போதே இவருடன் ஆலோசிக்கப்பட்டிருக்கும். பிரபாகரனின் வருகையோ, அடுத்த கட்ட ஆயுதப் போராட்டமோ சாத்தியமில்லை என்பது ருத்திரகுமாரனுக்கு உறுதியாகத் தெரிந்துவிட்ட நிலையில்தான்... நாடுகடந்த அரசாங்கம் அமைக்க தற்போது தீவிரம் காட்டுகிறார்'' என்கிறார்கள். அதோடு,
''பிரபாகரன் இனி வரவே மாட்டார் என்பதற்கு இன்னொரு அத்தாட்சி - நாடு கடந்த தமிழீழ அரசாங்கதின் மதியுரைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை! இந்த அறிக்கையில் எங்குமே பிரபாகரனைப் பற்றியோ அவரது வழி காட்டுதல் தொடர்பாகவோ வாசகங்கள் இடம் பெறவில்லை'' என்றும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
No comments:
Post a Comment