Thursday, April 29, 2010

தமிழ்க் கூட்டமைப்பு எம்.பிக்களை தன்பக்கம் இழுக்க அரசு சதி முயற்சி சலுகைகளுக்கு அடிபணியோம் என்கிறார் மட்டு. எம்.பி.




தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கு மஹிந்த ராஜபக்ஷ அரசு பகீரத முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் மட்டு. மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் நேற்று பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினார்.
பிரதியமைச்சர் பதவி, ரொக்கப் பணம், சொகுசு வாகனங்கள் போன்ற ஆடம்பரச் சலுகைகளைத் தருவதாகக் கூறி அரசுப் பிரதிநிதிகள் கூட்டமைப்பு எம்.பிக்களை அணுகுகின்றனர் என்று சுட்டிக்காட்டிய அவர், எனினும் அத்தகைய சதி முயற்சிக்குத் தாங்கள் ஒருபோதும் அடிபணியமாட்டார்கள் என் றும் சூளுரைத்தார்.
கூட்டமைப்பின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டிருக் கும் யோகேஸ்வரனை வரவேற்று மட்டு. துறைநீலாவணை தில்லையம்பல பிள்ளை யார் ஆலய முன்றலில் நேற்று கிராம மக்க ளால் விழா எடுக்கப்பட்டது.
அவ்வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:
பிரதியமைச்சர் பதவி, ரொக்கப்பணம், உயர்பாதுகாப்பு, சொகுசு வாகனங்கள் ஆகிய வற்றைத் தருவார்கள் என்று கூறி அரசுத் தரப்பினர் எம்மை விலை பேசுகின்றார்கள்.
மஹிந்த ராஜபக்ஷ அரசு எனக்குப் பிர தியமைச்சர் பதவி உட்பட அனைத்து வசதி களையும் ஏற்படுத்தித் தருவதாகக் கூறி என்னிடம் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் பிரதிநிதிகளை அனுப்பியும் பேச்சுகளை நடத்தியது. இதேபோலவே தமிழ்க் கூட்டமைப்பின் எல்லா எம்.பிக்களுடனும் இரகசியமாகப் பேரம்பேச அரசு முயல்கிறது.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசினால் விலைக்கு வாங்கவே முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்மக்களின் ஆணையை மதித்து நடப்பார்களே ஒழிய அம்மக்களுக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டார்கள்.
ஏனைய தமிழ்க் கட்சிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து தமிழ்மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பேரினவாதக் கட்சிகளை நாம் தோற்கடிக்க முடியும். கடந்த தேர்தலில் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.
இந்தத்தேர்தலில் ஒட்டு மொத்தமாக மட்டக்களப்பில் 360 வேட்பாளர் போட்டியிட்டனர். ஆனால் ஏனைய 359 வேட்பாளர்களும் எதிர்கொள்ளாத பிரச்சினைகளை எல்லாம் கூட்டமைப்பின் வேட்பாளரான நான் சந்திக்க நேர்ந்தது.
தேர்தலுக்கு முந்திய இரவில் துண்டுப் பிரசுரமொன்றை நான் வெளியிட்டது போல் வெளியிட்டனர்.
நான் தேர்தலில் இருந்து விலகுகிறேனென பொய்ப்பிரசாரம் செய்தனர். ஆனால் மக்கள் என்னைக் கைவிடவில்லை. நான் தமிழ் மக்களின் உரிமையைப் பெற்றுக்கொடுக்கும் வரை ஓயமாட்டேன் என்றார்.

No comments:

Post a Comment