Thursday, April 22, 2010

சபாநாயகராகச் சமல் ராஜபக்­ தெரிவு பிரதிச் சபாநாயகர் பதவி பிரியங்கரவுக்கு! ஈ.பி.டி.பியின் சந்திரகுமார் குழுக்களின் பிரதித் தலைவர்





ஏழாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ நேற்று நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளாலும் வாக்கெடுப் பின்றி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருடன் சேர்த்து முன்னாள் பிரதி சபாநாயகர் பிரியங்கர ஜயரட்ண பிரதி சபாநாயகராகவும், யாழ். மாவட்டத்தில் ஆளுங்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஈ.பி.டி.பியைச் சேர்ந்தவ ரான முருகேஷ் சந்திரகுமார்(அசோக்) குழுக்களின் பிரதித்தலைவராகவும் வாக்கெடுப்பின்றி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அத்தோடு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்றம் எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்கிறது என்றும் சபாநாயகரால் அறிவிக்கப்பட்டது.
காலை 8.45 மணியளவில் ஏழாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஆரம்பமானதும் முதலில் சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது.
சமல் ராஜபக்ஷவின் பெயரைப் பிரதமர் டி.எம்.ஜயரட்ண அந்தப் பதவிக்குப் பிரேரித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய அதை வழிமொழிந்தார். வேறு எவரின் பெயரும் இப்பதவிக்குப் பிரேரிக்கப்படாதமையால் சமல் ராஜபக்ஷ சபாநாயகராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என அறிவிக்கப்பட்டது.
பிரதமரும், கரு ஜயசூரியவும் எழுந்து சென்று சமல் ராஜபக்ஷவை அழைத்து வந்து சபாநாயகரின் ஆசனத்தில் அமரவைத்தனர். எம்.பிக்களின் சத்தியப்பிரமானத்தைத் தொடர்ந்து பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவு இடம்பெற்றது.
இந்தப் பதவிக்கு முன்னர் பிரதி சபாநாயகராகவிருந்த பிரியங்கர ஜயரட்ணவின் பெயரை பிரதமர் பிரேரித்தார். ஐக்கிய தேசியக் கட்சி எம்.பியான ஜோன் அமரதுங்க அதை வழிமொழிந்தார். அதையடுத்து பிரியங்கர பிரதி சபாநாயகராக ஏகமனதாக அறிவிக்கப்பட்டார்.
அடுத்து குழுக்களின் பிரதித் தலைவர் தெரிவு இடம்பெற்றது. இப்பதவிக்கு முருகேசு சந்திரகுமாரின் பெயரை நிமால் ஸ்ரீபால டி சில்வா பிரேரித்தார். டக்ளஸ் தேவானந்தா அதை வழிமொழிந்தார். அவரும் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அத்தோடு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவராக இந்த நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்கிறது என்று சபாநாயகர் அறிவித்தார்

No comments:

Post a Comment