Monday, April 26, 2010

நாம் தமிழர் இயக்கத்தின் போராட்ட எதிரொலி: அமிதாப் கொழும்பு செல்வது குறித்து பரீசீலனை


சிறிலங்காவின் கொடூர முகத்தை மறைப்பதற்காக இந்திய அரசின் உதவியுடன் சிறிலங்கா அரசு கொழும்பில் சர்வதேச விருது வழங்கும் விழாவை வரும் ஆடி 2 முதல் 4 ஆம் திகதி வரை நடத்த திட்டமிட்டுள்ளது. இதில் இந்தி நடிகர் அமிதாப் பச்சன் முக்கிய பங்காற்றுகின்றார்.இந்த நிகழ்ச்சியை நாம் தமிழர் இயக்கத்தலைவர் செந்தமிழன் சீமான் வன்மையாக கண்டித்தார்.

நாம் தமிழர் இயக்கம் அமிதாப் வீட்டு முன் ஆர்ப்பாட்டமும் முற்றுகையும் நடத்தும் என்றும் அறிவித்தார்.அவரது உத்தரவின் படி நாம் தமிழர் இயக்கத்தின் மும்பை கிளையின் சார்பாக நேற்று ஞாயிறு அன்று மும்பையில் உள்ள அமிதாப் வீட்டின் முன் நூற்றுக்கணக்கான நாம் தமிழர் இயக்கத்தினர் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அமிதாப் அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனுவையும் அளித்தனர்.அமிதாப் தமிழர்களின் உணர்வுகளை மதிக்கத்தவறினால் போராட்டம் தீவிரமாகும் என்றும் எச்சரித்தனர்.இதன் விளைவாக இன்று அமிதாப் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.அவரது வலைப்பக்கத்தில் தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

தமிழர்களின் உணர்வுகளைத்தான் புரிந்துள்ளதாகவும், அவர்களது உணர்வுக்கு மதிப்பளிப்பதாகவும் தெரிவித்துள்ள அமிதாப் விரைவில் இது குறித்து அனைவரிடமும் பேசி நல்ல முடிவைத் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து மும்பை நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் கருத்து தெரிவிக்கையில் இது எமது நாம் தமிழர் இயக்கத்தின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் முழு வெற்றி கிடைக்கும் வரை செந்தமிழன் சீமான் தலைமையில் எம் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment