Saturday, April 24, 2010

புலிகளின் பயமில்லாத் துணிவால் எழும் கலாசாரச் சீரழிவைக் கட்டுப்படுத்துவது யார்?



விடுதலைப்புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டு விட்டனர் என்பதற்காக அவர்களால் கட்டுப்படுத்தப் பட்ட சில விடயங்களை மறப்பதற்கும் மறுப்பதற்கும் முடியாமல் உள்ளது. அதில் ஒரு விடயம் கலாசாரச் சீரழிவை அவர்கள் கட்டுப்படுத்திய விதமாகும்.

அதாவது கற்பழிப்பு, கொள்ளை, கசிப்பு, கோஷ்டி மோதல் போன்ற சமூக சீரழிவை அவர்கள் பூரண மாகக் கட்டுப்படுத்தி இருந்தனர். இதன் காரணமாக அச்சமற்ற வாழ்வை மக்கள் அனுபவித்தனர். இரவு வேளையிலும் பெண்கள் தனித்து நடமாடக்கூடியதாக இருந்தது. சந்திகளில் கூடி நின்று இளைஞர்களுடன் சேட்டைகள், கோஷ்டி சண்டைகள் இல்லாமல் போக சந்திகள் நல்ல சங்கதிகளை பேசக்கூடிய இடமாக மாறின.

இவ்விதம் சமூகச் சீரழிவை அடியோடு அழித்த பெருமை விடுதலைப்புலிகளையே சாரும். இப்போது அவர்கள் இல்லாத துணிவில் சமூகச் சீரழிவு யாழ். குடாநாட்டில் எழுந்து நின்று ஆடத் தலைப்பட்டுள்ளது. கற்பழிப்பு, களவு, கொள்ளை, தனிமையில் இருப்பவர்களை கொலை செய்தல், கோஷ்டி மோதல், மதுபோதை, சந்திச் சண்டித்தனம் என எல்லாம் தலை விரித்தாடுவதை காணும் போது நெஞ்சம் வெடிக் கின்றது.

நிலைமை இப்படியே போகுமாயின் தென்பகுதியில் இருக்கக் கூடிய பாதாள உலகக் கோஷ்டி யாழ். குடாநாட்டில் உருவெடுக்கலாம் என்ற அச்சம் நியாயமானதாகவே இருக்கும். எனவே யாழ். குடாநாட்டில் உருவெடுக்கும் கலாசாரச் சீரழிவை அச்சமான வாழ்வை மூலவேருடன் பிரட்ட யாழ்ப்பாணச் சமூகம் முன்வரவேண்டும்.

இதுவிடயத்தில் நீதி பரிபாலனத்தின் பங்கோ மிகவும் அவசியமானதாகும். காவல்துறையினர் சட்டத்தை நிலைநாட்ட திடசங்கற்பம் பூண வேண்டும். இலஞ்ச ஊழல், பக்கச் சார்பு என எவையும் பொலிஸாரிடம் இருக்குமாயின் சமூகச் சீரழிவில் ஈடுபடுவோர் தப்பித்துக் கொள்ளவும் வலுவடையவும் வாய்ப்பு ஏற்படும். எனவே பொலிஸாரின் முன் பாரிய பொறுப்பு உள்ளது. பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் தங்கள் நிர்வாகக் கடமைகளை நேர்மையுடன் செய்யும் போது அவர்களின் கட்டுப்பாட்டில் கடமையாற்றும் பொலிஸார் சுயலாபம் தேடுவதில் இறங்க மாட் டார்கள்.

இதற்கு அப்பால் சமூகச் சீரழிவில் ஈடுபட்டவர் களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றுவது தொடர்பில் யாழ்.குடாநாட்டு சட்டத்தரணிகள் ஒரு தீர்க்கமான முடிபினை எடுக்க வேண்டும். பணத்திற்காக எவரையும் மீட்டுவிடுவது என்னும் கொள்கை அவர்களையும் சேர்த்து ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் பாதிக்கும்.

இவை யாவற்றுக்கும் மேலாக சமூக உறவு, இளைஞர்களுக்கான வழிகாட்டல், வேலைவாய்ப்பு, புரள்வான வாழ்விலிருந்து மீள்வதற்கான ஆத்மீகச் சிந்தனை, பெற்றோரின் கண்காணிப்பு, பாசமான குடும்ப உறவு, நம்பிக்கை தரக்கூடிய நட்பு என பல வகை சமூக நலமேம்பாடுகளையும் சமநேரத்தில் சமாந்தரமாக கட்டியயழுப்புவது கட்டாயமானதாகும்.

இது விடயத்தில் பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர்கள், கலாசார அலுவலர்கள், பிர தேச சபைகள், அரச சார்பற்ற அமைப்புகள் போன் றன அனைத்தும் தனித்து கூட்டாக இணைந்து பணியாற்றுமாக இருந்தால் கலாசார சீரழிவை மூல வேருடன் பிடுங்கிவிடுவது மிக எளிதாகும். இதனைச் செய்வதற்கு அரசியற்பலம் உதவி தேவையென்பது மறுப்பதற்கில்லை.

No comments:

Post a Comment