Tuesday, April 27, 2010

நித்யானந்தாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை-மருத்துவமனையில் இருந்து வெளியேற்றம்


பெங்களூர்: செக்ஸ் புகாரில் கைதாகியுள்ள நித்யானந்தா நெஞ்சு வலிப்பதாகக் கூறியதையடுத்து பெங்களூர் அரசு இருதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், பரிசோதனையில் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று தெரியவந்ததையடுத்து இன்று அவர் வெளியேற்றப்பட்டார்.

இமாச்சல் பிரதேசத்தில் கைதான நித்யானந்தாவை கர்நாடக சி.ஐ.டி. போலீசார் 4 நாட்களாக தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.

நேற்றுடன் அவரது போலீஸ் காவல் முடிவடைந்ததால் மாலை சி.ஐ.டி. அலுவலகத்தில் இருந்து நித்யானந்தாவை போலீஸ் வேனில் ராம்நகர் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு நீதிபதி நாராயண பிரசாத் (பொறுப்பு) முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நித்யானந்தாவின் வழக்கறிஞர் சந்திரமெளலி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

அப்போது நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த நித்யானந்தா, போலீசார் தனக்கு சரியான நேரத்துக்கு உணவு கொடுப்பதாகவும், தியானம் நடத்த அனுமதிப்பதாகவும், எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை என்றும் கூறினார்.

இதையடுத்து ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, போலீசாரின் கோரிக்கையை ஏற்று அவரை மேலும் 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.

இதைத் தொடர்ந்து மாலை 6.10 மணிக்கு நித்யானந்தா மீண்டும் சிஐடி போலீசார் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டார்.

அந்த அலுவலகத்தை நெருங்கியபோது தனக்கு நெஞ்சு வலிப்பதாக நித்யானந்தா கூறினார். இதையடு்த்து அவரை பன்னரகட்டா சாலையில் உள்ள ஜெயதேவா அரசு இருதய மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் நித்யானந்தா அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இ.சி.ஜி. மற்றும் ரத்தப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட்டது.

நித்யானந்தாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை-டாக்டர்கள்:

இந் நிலையில் நித்யானந்தாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

அவர்கள் கூறுகையி்ல், நித்யானந்தாவுக்கு எந்த உடல் நல பாதிப்பும் இல்லை. நெஞ்சு வலியும் இல்லை, காய்ச்சலும் இல்லை, ரத்த அழுத்தமும் இல்லை என்றனர்.

மருத்துவமனையில் இருந்து வெளியேற்றம்:

இந் நிலையில் நித்யானந்தா இன்று மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரை சிஐடி போலீசார் மீ்ண்டும் தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் விசாரணை தொடர்கிறது.

நேற்றிரவு நித்யானந்தா அனுமதிக்கப்பட்டதால் ஜெயதேவா மருத்துவமனையில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவமனைக்குள் இருந்த நோயாளிகளின் உறவினர்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

இவர்கள் நேற்றிரவு மருத்துவமனைக்கு வெளியே தரையில் படுத்துத் தூங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் நோயாளிகளும் பொது மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

1 comment:

  1. >>>>நித்யானந்தாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை-டாக்டர்கள்:

    இந் நிலையில் நித்யானந்தாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

    அவர்கள் கூறுகையி்ல், நித்யானந்தாவுக்கு எந்த உடல் நல பாதிப்பும் இல்லை. நெஞ்சு வலியும் இல்லை, காய்ச்சலும் இல்லை, ரத்த அழுத்தமும் இல்லை என்றனர்.<<<<

    நான் தான் நேற்றே இது பற்றி ஒரு பதிவு போட்டுட்டேன்; இது சும்மா ஒரு புருடா -- வழக்கமனான ஸ்டண்ட் தான்னு.

    நித்யானந்தாவின் நெஞ்சு வலி புருடா...

    ReplyDelete