தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகள் மட்டக்களப்பு காட்டுப்பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். வவுனியா ஓமந்தை பம்பை உட்பட்ட பல பாடசாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் தொழிற்பயிற்சி என்ற பெயரில் இடமாற்றப்படுவதாக தெரிவித்து ஏற்றிச் செல்லப்படுகின்றனர்.
அவ்வாறு ஏற்றிச் செல்லப்படுகின்ற போராளிகள் மட்டக்களப்பின் காட்டுப்பகுதியான திருக்கோணமடு என்ற பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காட்டுப்பகுதியைச் சூழ சிங்களக் கிராமங்களே காணப்படுவதாகவும் அங்கிருந்து வெளியேறமுடியாத வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழிற்பயிற்சி என்ற பெயரில் அவர்கள் அங்கு கொண்டு செல்ல ஆரம்பிக்கப்பட்டு பல மாதங்களாகியும் இதுவரையில் அவர்களுக்கு எந்தவித பயிற்சிகளும் வழங்கப்படவில்லை என அவர்களை ஏற்றிச் சென்று அங்குவிட்ட படையினர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.
வவுனியாவில் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தால் அவர்களை அவர்களின் உறவினர்கள் சென்று பார்த்து ஆறுதலடைந்துகொள்கின்றனர், குறித்த போராளிகளில் பெருமளவானோரைக் குடும்பத் தலைவர்களாகக் கொண்ட பெருமளவான குடும்பங்கள் வறுமை போன்ற நெருக்கடிகளை எதிர்கொண்ட நேரங்களில் அவர்களிடம் சென்று கதைத்து ஆறுதல் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்களை மட்டக்களப்பிற்கு மாற்றியுள்ளமையால் உறவினர்களுக்கும் போராளிகளுக்கும் இடையிலான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment