Wednesday, April 21, 2010

தமிழர் தாயகத்தில் துணைப்படைக் குழுக்களின் அட்டகாசங்கள் அதிகரிப்பு

பொதுத் தோ்தலில் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அமைதிகாத்துவந்த அரச தரப்பும், துணைப்படைக் குழுக்களும், தோ்தலைத் தொடர்ந்து தமது வன்முறைச் செயற்பாடுகளை தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்து விட்டுள்ளன.

தோ்தல்வரை சற்று ஓய்ந்திருந்த கொலை, கொள்ளை, கடத்தல், கப்பம் கோரல், பாலியல் துன்புறுத்தல் என்பன தமிழர் தாயகப்பகுதிகளில் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளன.

வவுனியா திருநாவற்குளம் சிவன்கொவில் பகுதியில் கொள்ளையிட்ட துணைப்படைக் குழுவினர் வீட்டில் இருந்த தயாரையும், 3 பிள்ளைகளையும் குத்திக் காயப்படுத்தியிருந்தனர். இதில் 9 அகவையுடைய ஜனனி என்ற சிறுமி உயிரிழந்துள்ளார். ஏனையவர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் நாவாலியைச் சோ்ந்த இருவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கடத்திச் செலல்ப்பட்டு, 50 இலட்சமும், 30 இலட்சம் ரூபாவும் கப்பம் கோரப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக யாழ் சுன்னாகம் பகுதியில் வவுனியா முகாமில் இருந்து சென்றிருந்த இளம் பெண் ஒருவர் துணைப்படைக் குழுவைச் சோ்ந்த இருவரால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். திங்கட்கிழமை கடத்திச் செல்லப்பட்ட இவர் மறுநாள் தப்பி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, வலிகாமத்தில் இருந்து இடம்பெயர்ந்து மானிப்பாய் பார்வதி முகாமில் தங்கியிருந்த 13 அகவையுடைய துரைசிங்கம் அஜீத்குமார் என்ற சிறுவன் கடந்த செவ்வாய்கிழமை வெள்ளைச் சிற்றூந்தில் கடத்திச் செல்லப்பட இருந்த போதிலும், அந்தக் கடத்தல் முயற்சியில் இருந்து சிறுவன் தப்பிச் சென்றிருந்தார்.

இவர் கடத்திச் செல்லப்பட முயற்சிக்கப்பட்டபோது வெள்ளைச் சிற்றூந்தில் ஏற்கனவே கடத்தப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மேலும் இரண்டு சிறுவர்களைக் கண்ணுற்றதாக குறிப்பிட்ட சிறுவன் தனது முறைப்பாட்டில் கூறிய போதிலும், மானிப்பாயில் நிலைகொண்டுள்ள காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சிறீலங்கா படைகள், மற்றும் அரச ஆதரவுக் கட்சிகளின் துணைகள் இன்றி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது கடினம் எனவும், தோ்தலில் அதிக பணத்தைக்கொட்டிச் செலவழித்த துணைப்படைக் குழுக்கள், மக்களைக் கடத்தி கப்பம் பெற முனைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

No comments:

Post a Comment