Tuesday, April 20, 2010

ஐ.பி.எல்., தலைவர் பதவியில் இருந்து விலக லலித் மோடி மறுப்பு :மத்திய அரசு தலையிட அனைத்து கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்


Top world news stories and headlines detail

புதுடில்லி : சூதாட்டம், பினாமி பெயரில் அணிகள் ஏலம் எடுத்தது போன்ற விஷயங்களில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக சர்ச்சைகளில் சிக்கியுள்ள லலித் மோடியின் மீதான பிடி இறுகியுள்ளது. ஐ.பி.எல்., தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என, லலித் மோடி பேட்டி கொடுத்தாலும், மோடிக்கு எதிராக ஐ.பி.எல்., நிர்வாகக் குழுவில் தீர்மானம் கொண்டு வந்து, அவரை பதவி நீக்கம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரை நீக்குமாறு, அரசியல் கட்சித் தலைவர்களும், மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.,) ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில், கிரிக்கெட் அணிகள் ஏலம் எடுக்கப்பட்டு, போட்டிகள் நடந்து வருகின்றன. கொச்சி அணி ஏலம் எடுக்கப்பட்டது தொடர்பான சர்ச்சையில் சிக்கிய சசி தரூர், தனது மத்திய அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது.அடுத்தபடியாக, ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடியும், இந்த விவகாரத்தில் தனது பதவியை இழப்பார் என, தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல்., போட்டிகளில் சூதாட்டம் நடப்பது, பினாமி பெயர்களில் அணிகளை ஏலம் எடுத்தது, போட்டிகளை 'டிவி'யில் ஒளிபரப்ப லஞ்சம் பெற்றது, ஐ.பி.எல்., வருவாய் தொடர்பாக வரி ஏய்ப்பு செய்தது போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள், லலித் மோடி மீது சுமத்தப்பட்டுள்ளன.வருமானவரித் துறை அதிகாரிகள் இதுகுறித்து ஏற்கனவே விசாரணையை துவக்கியுள்ளனர். முதல் கட்ட விசாரணையில், லலித் மோடியின் பதவிக்கு, 'வேட்டு' வைக்கும் விஷயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் முதலில் லலித் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்த மத்திய அமைச்சர் சரத் பவாரும், தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளார்.


சரத் பவார் ஆலோசனை : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சஷாங் மனோகர், மத்திய அமைச்சர் சரத் பவாரை நேற்று டில்லியில் சந்தித்தார். கிரிக்கெட் வாரியத்தின் மூத்த தலைவர்களும் சரத் பவாரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது, ஐ.பி.எல்., தொடர்பாக தற்போது நிலவி வரும் சர்ச்சைகள் குறித்து அவர்கள் பேசினர். தற்போது ஏற்பட்டுள்ள சர்ச்சைகளால், கிரிக்கெட் வாரியத்துக்கு, மக்களிடையே ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்க வேண்டுமெனில், லலித் மோடியை பதவியில் இருந்து நீக்குவது நல்லது என, இவர்கள் முடிவு எடுத்ததாக தெரிகிறது. பார்லிமென்ட் கூட்டத் தொடர் நடந்துவரும் நிலையில், ஐ.பி.எல்., விவகாரத்தில் அரசுக்கு மேலும் நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகளும் திட்டமிட்டுள்ளன. இதற்கு தீர்வு காணும் வகையில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிதம்பரம், விவசாய அமைச்சர் சரத் பவார் ஆகியோரும் நேற்று இதுகுறித்து பேச்சு நடத்தினர். இந்த சந்திப்பில் பேசப்பட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.


இதற்கிடையே, மத்திய அமைச்சர் சரத் பவார் கூறியதாவது:ஐ.பி.எல்., நிர்வாகக் குழு கூட்டம் வரும் 26ல் நடக்கிறது. இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு லலித் மோடி கட்டுப்படுவார். இந்த விவகாரத்தில் கிரிக்கெட் விளையாட்டின் நலன் கருதி, நிர்வாகக் குழு முடிவு எடுக்கும். கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய துணைத் தலைவராகவும் மோடி உள்ளார். எனவே, மோடி உள்ளிட்ட கிரிக்கெட் வாரியத்தின் அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில், ஒரு மனதாக முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு சரத் பவார் கூறினார்.


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் கூறியதாவது:கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள பெரும்பாலானோர், லலித் மோடிக்கு எதிராகவே உள்ளனர். எனவே, லலித் மோடியை ஐ.பி.எல்., தலைவர் பதவியில் இருந்து, தானாகவே விலகும்படி கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொள்ளும். இதை, மோடி ஏற்காத பட்சத்தில், வரும் 26ம் தேதி மும்பையில் நடக்கும் ஐ.பி.எல்., நிர்வாகக் குழு கூட்டத்தில், அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார். இவ்வாறு கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.'இந்த பிரச்னையில் மத்திய அரசு தலையிட வேண்டும்' என, மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக், பா.ஜ., மூத்த தலைவர் பிரகாஷ் ஜாவேத்கர், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.


லலித் மோடி பிடிவாதம் : சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக துபாய் சென்ற லலித் மோடி, நேற்று மாலை மும்பை திரும்பினார். அவர் கூறுகையில், 'ஐ.பி.எல்., தலைவர் பதவியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடம் இல்லை. இதுகுறித்து வெளியாகும் தகவல்கள் யூகத்தின் அடிப்படையிலானவை. ஐ.பி.எல்., தொடர்பான அனைத்து விவரங்களையும் வெளியிட தயார்' என்றார்.

No comments:

Post a Comment