Saturday, April 10, 2010

சட்டீஸ்கரில் மத்திய ரிசர்வ் பொலிஸ் படை முகாம் மீது நக்ஸலைட்டுகள் தாக்குதல் -புலிகளின் உதவியுடனா?

ப்ரல் 6-ம் தேதி காலை 6 மணி...

மீண்டும் ஒரு முறை தங்கள் கோபத்தைக் கொடூர மாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள் மாவோயிஸ்ட்கள். நக்ஸலைட்கள் பிடியில் சிக்கித் தவிக்கும் மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரில்... இதுவரை இல்லாத அளவுக்கு அதிக உயிர்களைக் குடித்திருக்கிறார்கள்! பஸ்தர் மற்றும் தண்டேவாதே என இரு மாவட்டங்களிலும் அடர்ந்த காடும், மலைப்பகுதிகளும் அதிகம். இங்குதான் நக்ஸலைட்களின் முக்கிய முகாம்கள் அமைந் துள்ளன.

சத்தீஸ்கரின் தலைநகரான ராய்ப்பூரிலிருந்து 500 கி.மீ. தூரத்தில் அந்த பயங்கரத் தாக்குதல் நடந்துள்ளது.

சமீபத்தில் மத்திய அரசு, 'ஆபரேஷன் கிரீன் ஹன்ட் (Operation Green Hunt)' என்ற பெயரில் நக்ஸ லைட்களை அழிக்கும் திட்டத்தை வகுத்தது. அதன்படி, நக்ஸலைட்கள்


ஆக்கிரமித்துள்ள பகுதிகளை விடுவிக்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் இறங்கியுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக தண்டேவாதே மாவட்டத்தின் சிண்டால்நார், டார்மடோலா கிராமப் பகுதியின் முக்ரானா காடுகளில் தங்கள் ஆபரேஷனை முடித்து விட்டு, சி.ஆர்.பி.எஃப். பட்டாலியன் 62-ம், 40 சத்தீஸ்கர் போலீஸாரும் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, டார்மடோலா அருகில் மறைந்திருந்த ஒரு நக்ஸலைட் கும்பல் திடீரென வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் சுமார் 15 பேர் குண்டுபட்டு உயிரி ழக்க... அந்தத் தகவல், நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சி.ஆர்.பி.எஃப். முகாமுக்குக் கிடைத்தது.

அங்கிருந்து ஒரு பெரும் படை சம்பவ இடத்தை அடைவதற்குள்... வழியில் நக்ஸலைட்களால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் வெடிக்க... பலரும் பலியாகிவிட்டனர். அதோடு, சாலை ஓரக் காடுகளில் ஒளிந்திருந்த சுமார் 1,000 நக்ஸ லைட்கள் வெறித்தனமாக படையினர் மீது தாக்கத் தொடங்கினர். சுமார் ஒன்றேகால் மணி நேரம் நடந்த இந்தச் சண்டையில்... சத்தீஸ்கரின் இரு காவ லர்கள், துணை கமாண்டண்ட் மற்றும் இணை கமாண்டண்ட் உட்பட 76 பேர் பலியானார்கள். எண்பதுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்!

மத்திய படைகளின் ஏராளமான ஆயுதங்களையும் கைப்பற்றிச் சென்ற நக்ஸலைட்களில் ஒருவருக்குக்கூட காயம் பட்டதாகத் தகவல் இல்லை. அந்தப் பகுதியின் கிராமவாசி ராம் மோரே, ''இதைத் தாக்குதல் என்பதைவிட, நக்ஸலைட்கள் மற்றும் நமது படைகளுக்கு இடையே நடந்த உக்கிரமான போர் என்றுதான் சொல்ல வேண்டும். வழக்கமாக இதுபோன்ற சம்பவத்தில் பொதுமக்களும் உயிரிழப் பார்கள். இந்த முறை மட்டுமே முழுக்க, முழுக்க ஜவான்கள் மற்றும் போலீஸாரே பலியாகிவிட்டனர். 'பெரிய அளவிலான தாக்குதலுக்கு நக்ஸலைட்கள் திட்டமிட்டிருக்கின்றனர்' என ஆந்திர உளவுத் துறை வெளியிட்ட தகவல்கள் இங்குள்ள பொதுமக்களுக்கும் தெரியும். ஆனால், இதை மத்திய படைகள் சீரியஸாக எடுத்துக் கொள்ளாததுதான் அதிசயம்!'' என்றார்.

இதை ஆமோதிக்கும் வகையில், சத்தீஸ்கரிலுள்ள மத்தியப் படை வீரர்கள், ''பஸ்தர் பகுதியில் இருக்கும் நக்ஸலைட்களை அடக்க மட்டும் மத்தியப் படையில் சுமார் 40,000 பேர் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆனால், இந்த சம்பவத் துக்குப் பின் கண்ணி வெடிகளுக்கு பயந்து காடுகளில் செல்ல பெரும்பாலானவர்கள் தயங்குகின்றனர். இதை முறியடிப்பதற்கும், நக்ஸலைட் களின் திடீர் தாக்குதலை சமாளிப்பதற்கும் நம்மிடம் எந்த யோசனையும் இல்லை. டெல்லியின் ஏ.சி அறைகளில் நம் உயர் அதிகாரிகள் அமர்ந்துகொண்டு எளிதாகத் திட்டமிடுகிறார்கள். அவர்கள் இங்கு தங்கி இருந்து சூழலை ஆராய்ந்து திட்டமிடுவது இல்லை. ஆனால், நகரங்களில் மறைந்து வசிக்கும் நக்ஸலைட்களின் மத்திய கமிட்டி உறுப்பினர்கள் அடிக்கடி காடுகளில் தங்கி, கீழ்மட்ட கேடர்களுடனும் ஆலோசனை செய்து திரும்புகிறார்கள். மத்திய மற்றும் மாநிலப் படைகளுக்கு இடையே தகவல்தொடர்பும் சரியாக இல்லை. இதை, ஒவ்வொரு தாக்குதலிலும் சரிசெய்வது குறித்து பேச்சுகள் எழுந்து, பிறகு அடங்கி விடுகிறது. கெரில்லா தாக்குதலில் நல்ல திறமை பெற்ற நக்ஸலைட்களை சமாளிக்க நமது ஜவான்களுக்கு தேவையான பயிற்சி இல்லை!'' என கோபாவேசமாகப் பேசுகின்றனர்.

இந்நிலையில், நக்ஸலைட்களை ஒடுக்க விமானப்படை மற்றும் ராணுவம் ஒன்றே தீர்வு எனும் வகையிலும் பரவலான கருத்துகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. இதில், விமானப்படையை பயன்படுத்துவது குறித்து மத்திய அரசும் ஆலோசனை செய்து வருகிறது. ஆனால், ராணுவத்தைப் பயன்படுத்தினால் ஏராளமான பொதுமக்கள் பலியாவார்கள் எனவும், நம்மில் ஒருவராக இருந்து நக்ஸலைட்களாக மாறியவர்கள் மீது தொடுக்கும் தாக்குதல், உள்நாட்டு போருக்கு சமம் என்பது போன்ற பல்வேறு கருத்துகளும் நிலவுகிறது.

இதற்கிடையே, நக்ஸலைட்களின் இந்தத் தாக்குதல் குறித்த திட்டத்தை, 50 வயதான ராமண்ணா என்ற சிறப்புச் செயலாளர் வகுத்துக் கொடுத்திருக்கலாம் என உளவுத் துறை கருதுகிறது. ''பாப்பா ராவுக்கு ராமண்ணா என்பவர் உதவியாக இருந்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த இவர்களது யோசனையில் பல தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. இதன் கமாண்டண்டாக 'இட்மா' எனும் புனைபெயர் கொண்ட சத்தீஸ்கரின் ஜெக்தால் பூர்வாசி இருக்கிறார். பஸ்தர் பகுதியை ஒட்டியிருக்கும் காடுகளில் ஒரு தனி அரசாகவே நக்ஸலைட்கள் செயல்படுகின்றனர். இந்த காட்டின் பல பகுதிகள் இன்னும் வெளி உலகத்துக்குத் தெரி யாமல், நக்ஸலைட்கள் தமது பிடியில் வைத்துள்ளனர்!'' என உளவுத் துறையினர் சொல்கின்றனர்.

சத்தீஸ்கரின் நக்ஸலைட் கமாண்டர்களில் ஒருவரான கோபால், பி.பி.சி. இந்தி செய்தியாள ருக்கு அளித்த பேட்டியில், (Operation Green Hunt)' -ஐ மத்திய அரசு திட்டமிட்டபோது, அதை எதிர்த்து ஒரிஸ்ஸாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்தினோம். அதன் பிறகும் நிறுத் தாமல் அதை செயல்படுத்தியதைக் கண்டிக்கும் வகையில்தான் சத்தீஸ்கரில் தாக்குதல் நடத்தி உள்ளோம். இதன் பெயரில் மத்திய படைகள் எங்கள் பகுதிகளில் ஆங்காங்கே நெருப்பு வைத்துக் கொளுத்தி வருகிறது. அதற்கு பயந்து அங்கு வசிக்கும் ஆதிவாசிகள் வேறு இடம் பெயர்கிறார்கள். எனவே, அதைத் தடுக்க எங்களுக்கு இப்படித் தாக்குவதைத் தவிர வேறு வழியில்லை. மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்த 72 மணி நேர சண்டை நிறுத்தம் அறிவிப்பு கொடுத்தது. ஆனால், எங்கள் தலைவர் கிஷண்ஜி 72 நாள்கூட நேரம் கொடுக்கத் தயார் என அறிவித்தார். இருப்பினும் பேச்சு வார்த்தைக்கும் வராமல் புதுப்புது நிபந்தனைகளைப் போடுகிறார் உள்துறை அமைச்சர் சிதம்பரம். ஆபரேஷன் கிரீன் ஹண்ட்டை நிறுத்தி சிறையிலுள்ள எங்கள் தலைவர்களை விடுதலை செய்யும்வரை இந்தத் தாக்குதலை ராணுவம் வந்தாலும் தடுக்க முடியாது!'' என சவால் விடுகிறார்.

இது அரசுக்கு விடும் சவாலல்ல; நம் ஜனநாயக நாட்டின் இறையாண்மைக்கு விடப் பட்டிருக்கும் சவால்!


ஆனாலும் அண்மைக்காலமாக மாவொயிஸ்டுகளின் தாக்குதல் வேகம் அதிகரித்துள்ளது.அவ்ர்களின் தாக்குதல் வியூகங்களும் புதிதாகவே உள்ளன. சென்ற ஆண்டு விடுதலைப்புலிகளை முற்றாக அழிப்பதற்கு இந்தியா வழங்கிய ஆதரவு அனைவரும் அறிந்ததே. அன்றைய காலகட்டங்களில் பல புலி உறுப்பினர்கள் தப்பி வந்து மாவோயிஸ்டுகளுடன் இணைந்து கொண்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் கசிந்த்திருந்து. ஆனால் அதை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் இந்தியாவில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக பா.சிதம்பரத்தின் ராஜினாமா நாடகமும் அரங்கேறியிருந்தது

No comments:

Post a Comment