
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தால் இலங்கை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக் குழு, ஐந்து விடயங்களின் கீழ் 300 குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் இத்தகவலை ஆணைக் குழுவின் செயலாளர் எஸ்.எம்.சமரக்கோன் வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இந் தக் குழுவுக்கு டி.எஸ்.விஜேசிங்க தலைமை வகிக்கிறார். சி.ஆர்.டி சில்வா, நிஹால் ஜெய மான, மனோ இராமநாதன், ஜெசீமா இஸ் மாயில், அனுர மட்டேகொட ஆகியோர் இக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர் என் றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளனவா என்பது குறித்துத் தமது குழு ஆராய்ந்துகொண்டிருக்கிறது என செயலாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தால் குற்றஞ்சுமத்தப்பட்டவர்கள், சுட்டிக்காட்டப்பட்டவர்கள், திணைக்களத்தின் அறிக்கையின் தன்மை மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் தமது குழு விசாரணைகளை நடத்திவருகிறது எனவும்
அத்துடன், யுத்தத்தில் சிறார்கள் மற்றும் பொதுமக்கள் மீதான பாதிப்பு, சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டமை, காணாமற்போனவர்கள், மனிதாபிமானத் தன்மைகள் போன்ற ஐந்து விடயங்களின் அடிப்படையில் தமது குழு விசாரணைகளை நடத்திவருகிறது எனவும் சமரக்கோன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த 5 விடயங்களின் கீழ் சுமார் 300 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. எனினும், அதற்கான உரிய காரணங்கள் அல்லது தடயங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.
அத்துடன், அந்த அறிக்கையில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டமைக்கான நீதி முறையிலான முடிவுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை சமரக்கோனின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதுவரை தமது குழு உயர் பாதுகாப்பு அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலைகளின் அதிகாரிகள், அரச அதிகாரிகள் ஆகியோரிடம் பதிவுகளைப் பெற்றுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், யுத்த சூனியப் பிரதேசத்தில் இருந்த மக்களுக்கும், இடம்பெயர்ந்தோர் முகாம்களில் உள்ள மக்களுக்கும் உரிய உணவுகள் மற்றும் மருந்துகள் கிடைக்கவில்லை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக எமது குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
எமது குழுவுக்கு விசாரணைச் சட்டத்தின் கீழான ஆணைக்குழுவின் அதிகாரங்கள் வழங்கப்படாமையால் தகவல்களைத் திரட்டுவதில் தாமதங்கள் ஏற்பட்டன. எனவே, அறிக்கை சமர்ப்பிப்பதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எமது குழு சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டமை மற்றும் காணாமற்போனவர்கள் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்குத் தீர்மானம் மேற்கொள்ளவில்லை.
எனினும், எமது குழுவின் அறிக்கையும் அதன் காரணங்களும் பரிந்துரைகளும் எதிர்வரும் ஜூலை மாத இறுதிக்குள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படும் இப்படி சமரக்கோன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment