Sunday, April 4, 2010

நித்தியானந்தா போய்... சதானந்தா..!
''தியான பீடத்தின் அத்தனை பொறுப்புகளில் இருந்தும் நான் விலகிக் கொள்கிறேன். என் ஆன்மிக வாழ்க்கையை மற்றவர்களிட மிருந்து விலக்கி, ஏகாந்தமாகத் தனித்துத் தொடர விரும்புகிறேன். ஆசிரமத்தை புதிய நிர்வாகிகளிடம் ஒப்படைத்துவிட்டேன்!'' - திடீர் திருப்பமாக இப்படி அறிவித்திருக் கிறார் நித்தியானந்தா!

புதிய தலைவர் நித்ய சதானந்தா!

பல ஆயிரம் கோடி மதிப்புடைய ஆசிர மத்தின் பொறுப்புகளையும் நித்ய சதானந்தா என்பவர் கையில் ஒப்படைத்திருக்கிறார் நித்தியானந்தா. நித்ய சதானந்தாவை அவர் இந்த அளவுக்கு நம்பியது எப்படி?

''நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பாவடித் தெருவைச் சேர்ந்தவர் குட்டி என்கிற திருவேங்கடம். வசதி வாய்ப்புகளுக்குப் பஞ்சமில்லாத குடும்பம். திருவேங்கடத்துக்கு திருச்செங்கோட்டில் ஜோதி, அமர்ஜோதி என இரண்டு தியேட்டர்கள், ஸ்பின்னிங் மில்ஸ் என ஏகப்பட்ட தொழில்கள். இவருக்கு மூன்று பசங்க. மூத்த பையன் பேரு தனசேகரன். காலேஜ் முடிச்சுட்டு அப்பாவோட தொழிலை கவனிச்சுட்டு இருந்தாரு. அதோட, அவருக்கு ஆன்மிகத்துல அதிகமாக ஈடுபாடு. அடிக்கடி ஈஷா யோகா மையத்துக்குப் போவாரு.

இடையில் தனசேகரன் உடல் நலம் பாதிக்கப்பட்டார். அவரால எதுவுமே சாப்பிட

முடியாது. சாப்பிட்டதுமே வாந்தி வந்துடும். போகாத ஆஸ்பத்திரி இல்ல. பார்க்காத டாக்டர் இல்லை. ஆனாலும் பலனில்லை.

அப்போ பள்ளிப்பாளையத்துக்கு நித்தியானந்தா வந்திருக்காரு. அவரு கை வெச்சா எல்லா நோயும் சொஸ்தமாகும்னு சொன்னாங்க. அதைக்கேட்டு தனசேகரன் அவரைப் பார்க்கப் போயிருக்கார். பார்த்த கொஞ்ச நாள்லயே அவரோட நோய் குணமா யிடுச்சு. அப்படித்தான் நித்தியானந்தா மேல அளவில்லாத ஈடுபாடு வந்து, காவி கட்டிக் கிட்டு ஊரெல்லாம் நித்தியானந்தா புராணம் பாடினார். ஒருகட்டத்துல, 'இனி நான் வீட்டுக்கே வர மாட்டேன்'னு சொல்லி நித்தி யானந்தாவோட போய் செட்டிலாயிட்டார். நித்தியானந்தாதான் தனசேகரன் பேரை நித்ய சதானந்தான்னு மாத்தினாரு. பெங்களூரூ பிடதியில ஆசிரமம் வைக்க நிலம் பார்த்தப்ப அதுக்காக தன்னோட சொத்துல இருந்து 50 லட்ச ரூபாயை நித்தியானந்தாவுக்கு கொண்டு போய் கொடுத்திருக்கார் தனசேகரன்.

ஆசிரமம் எல்லாம் கட்டி முடிச்ச பிறகு தன்னோட மனைவிக்கும் சந்நியாசம் வாங்கிட்டு அவங்ளையும் ஆசிரமத்துக்கு கூட்டிட்டுப் போயிட்டார்!'' என்கிறார் நித்ய சதானந்தாவின் பள்ளிக்கால நண்பர் ஒருவர்.

கைமாறிய காரணம்!

ஆசிரமத்துக்கு நெருக்கமான சிலர், ''தியான பீடத்தோட செக்ரெட்டரி என்ற கௌரவமான அந்தஸ்தை நித்தியானந்தா, நித்ய சதானந்தாவுக்கு கொடுத்திருந்தாரு. பீடத்தைப் பொறுத்தவரை நித்தியானந்தாவுக்கு அடுத்தபடியா முழு அதிகாரம் இந்த நித்ய சதானந்தாவுக்குதான். நித்தியானந்தா ஊரில் இல்லாத சமயங்களில்... ஆசிரமத்துக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நித்ய சதானந்தாவுக்கு பணப் பற்றே கிடையாதாம். சி.டி. விவகாரத்துக்குப் பிறகு நித்தியானந்தா தலைமறைவு காலத்திலும் அவருடன் தங்கு தடையின்றி தொடர்பிலிருந்தார் இவர். வழக்கு கோர்ட்டுக்கு வரும்போது ஆசிரமத்தோட சொத்துகளுக்கு பங்கம் வந்திடக் கூடாதுன்னு ஆசிரமப் பொறுப்புகளை நித்ய சதானந்தாவுக்கு கைமாத்தி இருக்கார் நித்தியானந்தா. தன் மீதான வழக்குகள் எதுவுமே ஆசிரமத்தின் செயல்பாட்டை பாதித்து விடக்கூடாது என்ற கவலைதான் இந்த மாற்றத்துக்குக் காரணம்!'' என்கிறார்கள்.

செக் வைக்கப்பட்ட தொகை டிரான்ஸ்ஃபர்!

நித்தியானந்தாவின் இந்த ஜரூர் திட்டத்தை முன்கூட்டியே கணித்த எதிர் தரப்பு அடுத்தடுத்த மூவ் குறித்து போலீஸுக்கு தகவல்களை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறதாம். நன்கு விவரம் அறிந்த வட்டாரங் களில் சிலர், ''ஆசிரமப் பொறுப்புகளை உதறுவதற்கு முன்னரே, தமிழகத்தில் தன் பெயரில் இருக்கும் சொத்துகளையும் சேமிப்பு பணத்தையும் வேறு பெயருக்கு மாற்ற நித்தியானந்தா மெனக்கெட்டார். தமிழகத்தின் பல வங்கிகளில் ஆசிரம வங்கிக் கணக்கு இருக்கிறது. அவற்றை சில நாட்களுக்குமுன் வேறொரு வங்கிகளுக்கு மாற்ற சத்தமின்றி முயற்சி நடந்தது. இந்த விஷயத்தை சென்னை போலீஸுக்கு அவரது எதிரிகள் போட்டுக் கொடுத்துவிட்டார்கள். கடந்த 30-ம் தேதி சென்னை நான்கெழுத்து வங்கி ஒன்றிலிருந்து வேறொரு கணக்குக்கு படுகணிசமான ஒரு தொகையை மாற்றும்படி ஆசிரம தரப்பு கோரி இருக்கிறது. வங்கி நிர்வாகமும் அதற்கான வேலைகளைச் செய்ய... புலிப் பாய்ச்சலில் சென்னை போலீஸ் அதனைத் தடுத்து விட்டது. 'நித்தியானந்தா மீதான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் எக்காரணம் கொண்டும் அவர் வங்கிக் கணக்கை மாற்றக் கூடாது' என போலீஸ் எச்சரிக்க... வங்கி நிர்வாகமும் பின்வாங்கிவிட்டது.'' என்று கூறு கிறார்கள்.

துறந்தாலும் தொடரும் படை!

'இனிமேல் துறவறத்தில் தனித்திருக்கப் போகிறேன்' என அறிவித்தாலும் நித்தியானந்தாவைச் சுற்றி எப்போதும் பாதுகாப்பு வளையம் இருக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதாம். இதுகுறித்துச்சொல்லும் ஆசிரம எதிர்ப்பாளர்கள், ''ஆசிரமத்துக்கு நம்பிக்கையான சிலரோடு எதற்கும் அஞ்சாத ஆட்கள் சிலரும் அந்தப் பாதுகாப்பு படையில் இருக்கிறார்கள். நித்தியானந்தாவின் இருப்பிடத்தை கர்நாடக போலீஸுக்கு முன்பே தமிழக போலீஸ் டீம் கண்டுபிடித்து விட்டது. போன் பேச்சுகள் மூலமாக அவருடைய அனுதின நடமாட்டமும் கண்காணிக்கப்பட்டது. ஆனால், தான் இருக்கும் இடம் யாருக்கும் தெரியாது என நித்தியானந்தா நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர் நடத்தும் பணப் பரிவர்த் தனைகள் தொடங்கி அனைத்துவிதமான மூவ்களும் போலீஸுக்கு அத்துப்படி. சமீபத்தில், தன்னை சந்தித்த பி.ஜே.பி. புள்ளி ஒருவரிடம் அத்தனை வழக்குகளையும் முடிவுக்கு கொண்டுவர வெயிட்டாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் நித்தி யானந்தா. இப்போது ஆன்மிகத்துக்கு சம்பந்தமில்லாத ஆட்களோடு வலம் வரும் அவர், இன்னும் எத்தகைய சர்ச்சைகளை எல்லாம் விலைக்கு வாங்கப் போகிறாரோ?'' என்கிறார்கள்.

தயாராகக் கடிதம்!

ஏப்ரல் முதல் தேதியிலிருந்தே ஆசிரமப் பணிகளை நித்ய சதானந்தா தொடங்கி விட்டாராம். முதல் வேலையாகப் பல ஊர்களிலும் இருக்கும் ஆசிரம நிர்வாகிகளுக்கு அனுப்ப உருக்கமான சர்குலர் கடிதத்தை அவர் ரெடி செய்திருக்கிறாராம். அதில், ''சுவாமி, கூடிய சீக்கிரமே திரும்பி வந்து ஆசிரமப் பொறுப்புகளை ஏற்பார். அதுவரை அவர்விட்டுச் சென்ற பணிகளை நாம் திறம்பட செய்து காட்ட வேண்டும். எப்போதும் போல ஆசிரமத்துக்கு உறுதுணையாக இருங்கள்...'' எனச் சொல்லப்பட்டிருக்கிறதாம்!


நன்றி ஜீனியர் விகடன்

No comments:

Post a Comment