Sunday, April 4, 2010

சுடுகாட்டில் மேடை... அழகிகளின் ஆட்டம்!

வாழ்கிற காலத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அதகளப்படுத்தும் மனிதர் களுக்கு, ஆவி பிரிந்துபோனால் அப்புறம் எந்த குஷியும் கிடையாது என்பது தெரியும்..! ஆனால், இந்தக் கூற்றைப் பொய்யாக்கும் விதத்தில் ஆவிகளைக் குஷிப்படுத்த என்றே ஒரு 'ஸ்பெஷல் குத்தாட்ட நிகழ்ச்சி' சுடுகாட்டில் நடைபெறுகிறது. கடந்த வாரம், உத்தரப் பிரதேசத்தில் நடந்த இந்தக் கூத்து, வட இந்தியாவையே கலகலக்க வைத்துவிட்டது!

உ.பி-யின் தெய்வீக நகரங்களில் முக்கியமானது காசி எனப்படும் வாரணாசி. பனாரஸ் எனவும் அழைக்கப்படும் இங்கு கங்கை நதி ஓடுகிறது. இதன் கரைகளில்


ஒன்றாக அமைந்திருப்பது 'மணிகர்னிகா காட்' எனப்படும் சுடுகாடு. சமீபத்தில், இயக்குநர் பாலாவுக்கு தேசியவிருது பெற்றுத்தந்த 'நான் கடவுள்' திரைப் படம், மணிகர்னிகாவில்தான் படமாக்கப்பட்டது. வட இந்தியாவின் புகழ்பெற்ற சுடுகாடான இங்கு, 24 மணி நேரமும் பிணங்கள் எரிந்துகொண்டே இருக்கும்... இந்த எரியும் சிதைகளுக்கு இடையில் நடந்த சுடுகாட்டுத் திரு விழாவில்தான் (மார்ச் 21, 22-ம் தேதி) நாம் சொன்ன செம கலக்கல்!

மணிகர்னிகா காட் முழுவதும் சீரியல் லைட் மற்றும் டிஸ்கோ லைட்டுகளால் அலங்கரிக்கப்பட... சுடுகாட்டின் உள்ளே, ஆங்காங்கே எரியும் சிதைகளுக்கு நடுவே ஒரு மேடை அமைத்து, ஸ்பீக்கர்கள் அலறின. அதில் வெளியாகிக் கொண்டிருந்த இந்தி மற்றும் போஜ்புரி படப் பாடல்களின் இசைக்கேற்ப, வளைந்துநெளிந்து மேடையில் குத்தாட் டம் போட்டபடி கிளாமர் உடைகளு டன் பல அழகி கள்..!

சுடுகாட்டில் சுமார் 600 பேர் இதை கூடி ரசித்தபடி இருக்க... பிணத்தை எரிக்கும் வெட்டியான்களுக்கும் அன்று, ஒரு ஜாலியான நாள்தான். ஆனால், அவர்கள் அனைவரின் ரசனைகளுக்கும் மேடையில் விருந்தளித்து கொண்டிருந்தவர்கள், 20 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட செக்ஸ் தொழிலாளிகள்!

''இந்தச் சுடுகாட்டில் இறந்தவர்களைக் கொண்டுவந்து எரித்தால், முக்தி கிடைத்து, அவர்கள் உயிருடன் இருந்தபோது செய்த பாவங்கள் நீங்கி விடும். அப்படிப் பட்ட இடத்தில் நடக்கும் இந்தத் திருவிழாவில் பாவப்பட்டவர்களாகிய நாங்கள் வந்து ஆடினால், எங்களுக்கும் முக்தி நிச்சயம். அடுத்த ஜென்மத்தில் பாலியல் தொழிலாளியாக அல்லாமல், நல்ல பிறவியாக வாழும் பலன் எங்களுக்குக் கிடைக்கும். இதற்காகவே, நான் அலகாபாத்திலிருந்து கடந்த ஐந்து வருடமாக இந்த திருவிழாவில் வந்து ஆட்டம் போடுகிறேன்...'' என சொன்னார் 30 வயதான சப்னா.

''இதில் கலந்துகொண்டால், எங்கள் தொழிலும் அமோகமாக இருக்கும். நான் கடந்த 6 வருடங்களாக இதில் ஆட்டம் போட ஆரம்பித்ததில் இருந்து, என்னி டம் சுகம் அனுபவித்துவிட்டு யாரும் காசு கொடுக்காமல் ஏமாற்றிச் செல்வதில்லை. போலீஸ் தொல்லைகளும் இல்லை. இனியும் வருடம் தவறாமல் இந்த திருவிழாவில் கண்டிப்பாக ஆட்டம் போடுவேன்..!'' - இது மிர்சாபூரில் தொழில் செய்துவரும் 28 வயதான முஸ்கான்.

இப்படி ஆட்டம் போட வந்தவர்களுடன் விழாவை வேடிக்கை பார்க்க மட்டுமே வந்த செக்ஸ் தொழிலாளிகளும் உண்டு. அதுபோல் வந்த 40 வயது நீத்து, ''இங்கு நான் 10 வருடங்கள் தொடர்ந்து ஆடி விட்டேன். எனவே, இந்த முறை நான் வேறு ஒரு காரணத்துக்காக எனது மகள்களுடன் வந்தேன். சில மாதங்களுக்கு முன் எனது ஒரே மகனை பாம்பு கடித்துவிட்டது. எமனின் வாசல் வரை சென்று திரும்பிவந்தான் என் மகன். அப்போது இந்த நிகழ்ச்சிக்கு வருவதாக வேண்டிக் கொண்டேன். அந்த வேண்டுதல் தீர்க்கவே இங்கே வந்தோம்!'' என உணர்சிவசப்பட்டார்.

இந்த விழா தொடங்குவதற்கு முன், 'மணிகர்னிகா காட்'டின் நுழைவு வாயிலில் அமைந்துள்ள ஸமஷானேஷ்வர் மஹாதேவ் எனும் சிவன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெறும். அதில் கலந்துகொள்ளும் விலைமகளிர்கள், தாங்கள் கொண்டு வந்த இனிப்பு, கஞ்சா, மதுபான பாட்டில்களை சிவனுக்குப் படைத்து (!) வழிபடுகிறார்கள். பின்னர்தான் ஆரம்பமாகிறது ஆட்டம்..!

''பல நூறு ஆண்டுகளாக நடந்து வரும் திருவிழா இது. அந்தக் காலத்தில் இந்தப் பகுதியை ஆண்ட 'டோம்' எனும் சமூகத்து அரசர் தொடங்கிவைத்தது, இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது. இங்கு வாழ்ந்துவரும் டோம் ராஜாவின் சந்ததியர்கள்தான் வருடம் தவறாமல் இதை நடத்தி வருகின்றனர். தம் பாவங்களைப் போக்க இங்கு ஆட்டம்போட வரும் அழகிகள், அதற்காக காசு வாங்குவதில்லை. அவர்களைத் தேடியும் நாம் போவதில்லை!'' என விழா குறித்து விளக்கம் அளித்தார், ஸமஷானேஷ்வர் மஹாதேவ் கோயிலின் தலைமை பூசாரி பாபாநாக்நாத்.

ஆவிகள் எந்தளவுக்கு குஷியாச்சோ யார் கண்டார்? வந்த ஜனத்துக்கு குஷியோ குஷி!

No comments:

Post a Comment