Tuesday, April 13, 2010

வெளிநாட்டு நிறுவனம் எம் மீது அக்கறை! ஆனால் எமக்கான அமைப்புக்கள்?!!


வன்னிப் பகுதியில் காணப்படுன்ற படையினரின் நடமாட்டங்களால் போரின் போது கணவனை இழந்த குடும்பப் பெண்கள் அச்சத்துடனும், பயத்துடனும் வாழ்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணைக்குழு (UNHCR) சுட்டிக்காட்டியுள்ளது.

போர் முடிவுக்கு வந்த பின்னர் இவ்வருட ஆரம்பத்தில் வன்னிக்கு சென்றிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணைக்குழு மற்றும் அபிவிருந்தி மற்றும் ஒத்திசைவுக்குமான சுவிற்சலாந்தின் நிலையத்தின் பிரதிநிகள் இணைந்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பெண்கள் மீளக்குடியேறிய பின்னர் தமது நாளாந்த வாழ்க்கை தொடர்பில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக அவர்கள் தமக்கான தற்காலிக இருப்பிடங்களை அமைப்பதற்கு அவர்கள் ஏனையோரில் தங்கியிருப்பதால், மீளக்குடியேறும் போது கிடைத்த உதவித் தொகையில் பெரும்பகுதியை அவர்களுக்குச் செலவிட வேண்டியுள்ளதாக இவ்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் பல பெண்களின் கணவர்மார் இன்னும் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இவ்விரு நிறுவனங்களும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையின் முக்கியமான பகுதிகளை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.

போரின் போது இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறும் போது UNHCR அமைப்பினால் வழங்கப்பட்ட உதவிப்பணம் பயன்படுத்தப்பட்ட வழிகள் குறித்தே இவ்வறிக்கை அதிக கவனம் செலுத்தியுள்ளது.

போரின் போது இடம்பெயர்ந்த மக்கள் பல்வகையான துயரங்களையும், நெருக்கடிகளையும் கடந்து நலன்புரி முகாம்களுக்கு வந்த போது ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணைக்குழுவின் வேண்டுதலின் பிரகாரம் இலங்கை அரசினால் இவர்களுக்கு 5 000 ரூபா வழங்கப்பட்டது.

இப்பணம் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணைக்குழுவினால் இலங்கை அரசுக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டது. பின்னர் மீதி 20 000 ரூபாவும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணைக்குழுவினால் இவர்களுக்கு வழங்கப்பட்டது.

இவர்கள் தமக்கான தற்காலிக இருப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கும்இ உடைந்த வீடுகளைத் திருத்துவதற்கும் மற்றும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குமாக இந்நிதியுதவி வழங்கப்பட்டது.

அம்மக்கள் தமது இத்தேவைகளை ஓரளவுக்காவது பூர்த்தி செய்வதற்கு இந்நிதி உதவியுள்ளது.

இவ்வாறு மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பமான போது அமைப்பின் பிரதிநிதிகள் அந்நடவடிக்கைகளை கண்காணித்தமை முக்கியமான ஒரு விடயமாகும்.

ஆனால் நாம் எமது பயணத்தை முடித்து திரும்பிய போது நிதிப் பற்றாக்குறையின் காரணமாக இவ்வமைப்பின் நிதியுதவி நிறுத்தப்பட்டமை குறித்து நாம் அறிந்த போது அதிர்ச்சியடைந்தோம்.

தமக்கான தற்காலிக இருப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கும், குழந்தைகளுக்கான உடைகளை வாங்குவதற்கும், விவசாய முயற்சிகளுக்கும், உந்துருளிகளை வாங்குவதற்கும் என பலதரப்பட்ட வகைகளில் இப்பணம் மீளக்குடியேறிய மக்களால் செலவிடப்பட்டுள்ளது.

பல்வேறுபட்ட தேவைகளின் காரணமாக பலர் இப்பணத்தில் உந்துருளிகளை வாங்கியுள்ளனர்.

இலங்கைப் படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் காரணமாக வன்னி இன்னும் வெறுமையாகவே இருக்கின்றது.

அங்கு மீளக்குடியேறிய மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கின்றது. அங்கு மக்கள் தமது வாழ்வை அடிப்படையில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

போரின் போது இடம்பெயர்ந்த மக்கள் சுமார் 50 சதவீதமானோhர் மீளக்குடியேறிய யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளுக்கும் நாம் சென்றிருந்தோம்.

வன்னியில் பெரும்பாலான வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டோ அல்லது உடைந்தோ தான் காணப்படுகின்றன. இப்பகுதியில் பலவிடங்களில் இன்னும் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளது.

இம்மக்களுக்கான வருமானத்தை ஏற்படுத்திக் கொள்வதில் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

விவசாயிகளும், கடல் தொழிலாளர்களும் தமது தொழில்களை ஆரம்பிப்பதற்கு அடிப்படை வசதிகளற்று இருக்கின்றனர்.

எனவே, இவை குறித்த வாய்ப்பு, வசதிகள் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பெரும்பாலான இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்தக் கிராமங்களுக்கு திரும்பி இருக்கின்ற போதிலும் பலர் தமது உறவுகளை இப்போரின் போது இழந்துள்ளனர். இன்னும் பலர் காணாமல் போயுள்ளனர்.

மேலும் பலர் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய காரணங்களால் அம்மக்கள் மத்தியில் இன்னும் கவலையும், அதிர்ச்சியும் இருக்கின்றது.

மனிதாபிமான அமைப்புக்களுடன் இணைந்து இலங்கை அரசாங்கம் இம்மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பில் செயலாற்றி வருகின்ற போதிலும், மேலும் பல விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.

அவர்கள் தமது இயல்வு வாழ்வுக்கு திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டியுள்ளது.

நலன்புரி முகாம்களில் சுமார் 1,00,000 வரையிலான மக்கள் இன்னும் தங்கியிருக்கின்றார்கள். அவர்களுக்கு நடமாடும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் விசேட அனுமதியின் பேரில் 10 நாட்கள் வெளியில் போய் வர அனுமதிக்கப்படுகின்றார்கள்.

இந்நிலையில், தற்போது மீளக்குடியேறி வருகின்ற மக்கள் UNHCR அமைப்பின் உதவித்தொகையை பெற முடியாதவர்களாக இருப்பதால் அவர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகப் போகின்றனர்.

ஆயினும், இந்த உதவித் தொகையை எதிர்பாராமல் பலர் தமது இருப்பிடங்களுக்கு திரும்பவே எண்ணுகின்றனர்.

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடபகுதி மெல்ல மெல்ல மீண்டும் எழும்பி வருகின்ற போதிலும், நிறைந்த சவால்களை எதிர்கொண்டிருப்பதாக இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அமைப்பு ஒன்றே எமது மக்கள் தொடர்பில் இந்தளவிற்கு கரிசனை கொண்டு அறிக்கையாவது வெளியிட்டுள்ள நிலையில் தமிழ் மக்களின் பிதாமகர்கள் எனத் தம்மைக் கூறிக்கொள்கின்ற பல புலம்பெயர் தாயகத்திற்கான அமைப்புக்கள் அம் மக்கள் குறித்து எந்த அக்கறையும் இன்றி இருப்பதுதான் வேதனை என்கிறார் முள்ளிவாய்க்காலில் தனது இரண்டு பிள்ளைகளையும் தனது கால்கள் இரண்டையும் இழந்த முதியவர் ஒருவர்

1 comment:

  1. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete