Sunday, April 4, 2010

தமிழ்நாட்டில் ஈழமக்களின் அவலங்கள்

''விசாரணை என்று சொல்லி போலீஸ்காரங்க என்னைக் கூட்டிட்டுப் போயி சீரழிச்சிட்டாங்க... இனிமேல் நான் உசுரோட இருக்க மாட்டேன்...'' என்று கதறியபடியே இலங்கை அகதிகள் முகாமில் பத்மா தேவி என்ற பெண் தீக்குளிக்க... தமிழகமே தகித்துக்கொண்டு இருக்கிறது..!

அதற்கு முன்பு ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக்...

கரூர் காந்திகிராமம் ஜி.ஆர்.வி. நகரில் வசித்து வந்தவர் எல்.ஐ.சி. வளர்ச்சி


அதிகாரி கார்த்திகேயன். அவர் மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ராம்பிரகாஷ் என்ற 12 வயது மகன்; தீபிகா என்ற 7 வயது மகள். கடந்த 2007 மே மாதத்தில் குழந்தைகள் விடுமுறையில் வீட்டில் தனியே இருக்க... பெற்றோர் வேலைக்கு சென்றனர். அந்த சமயத்தில்தான் இரு குழந்தைகளையும் கழுத்தை அறுத்து சிலர் கொடூரமாகக் கொன்றுவிட்டனர். இதுபற்றி, 'ரத்தத்தில் உறைந்த கரூர்... பூக்களை கசக்கிய கொடூரன்கள்!' என்ற தலைப்பில் 27.05.07 தேதி யிட்ட ஜூ.வி-யில் வெளிட்டிருந்தோம்.

யார் கொலையாளி என கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக போலீஸார் தேடிக்கொண்டு இருந்தனர். இந்நிலையில், சமீபத்தில் முரளி என்கிற ராப்பரி முரளி, குமார் என்கிற விஜயகுமார், பாண்டி என்கிற தங்கபாண்டி ஆகிய மூவரையும் கரூர் போலீஸ் கைதுசெய்தது. இதுபற்றி, 'காட்டிக் கொடுத்த மூன்றாவது ரத்தம்!' என்ற தலைப்பில் 07.03.2010 தேதியிட்ட இதழில் ஒரு 'ஃபாலோ-அப்' கட்டுரையும் வெளியானது. போலீஸிடம் பிடிபட்ட மூவரில் ஒருவரான குமாரின் மனைவிதான் பத்மாதேவி!

1987-ம் ஆண்டு இலங்கையிலிருந்து கரூர்-ராயனூரில் உள்ள அகதிகள் முகாமுக்கு வந்தார்கள் குமார்-பத்மாதேவி. கடந்த மாதம், இரட்டைக் கொலை வழக்கில் பசுபதி பாளையம் போலீஸார் குமாரை கைது செய்தனர். அதைத் தொடர்ந்து விசாரணைக்காக பத்மாதேவியையும் போலீஸார் அழைத்துச் சென்றார்கள். அதன் க்ளைமாக்ஸ்தான் தீக்குளிப்பு! தன்னை போலீஸார் பலாத்காரம் செய்துவிட்டதாக கதறியே தன் மீது தீ வைத்துக் கொண்ட பத்மாவதி, கடந்த 23 நாட்களாக மருத்துவமனையில் உயிருக்குப் போராடி... மார்ச் 30-ம் தேதி இறந்துவிட்டார். இதையடுத்து ஈழத் தமிழ் ஆர்வலர்கள் கொந்தளித்துக் கிளம்பினார்கள்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான பாரி நம்மிடம், ''இரட்டைக் கொலையில் குமாரைப் பற்றி விசாரிக்க அவர் மனைவி பத்மாதேவியையும் போலீஸ் கூட்டிட்டு வந்தாங்க. ஒரு பொண்ணை ஆண் போலீஸ்காரங்க விசாரிக்கவே கூடாது. ஆனா, ஆண் போலீஸ்காரங்கதான் பத்மாதேவியை ஜீப்ல ஏத்திக் கூட்டிட்டுப் போயிருக்காங்க. ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போகாம தனியா ஒரு அறையில வெச்சு விசாரணை நடத்தியிருக்காங்க. 'எனக்கு எதுவும் தெரியாது'ன்னு பத்மாதேவி சொல்லியும், அவரை அடிச்சு சித்ரவதை பண்ணியிருக்காங்க. அதோட, வலுக்கட்டாயமா சில உணவுகளை பத்மாதேவியைச் சாப்பிட வெச்சுருக்காங்க. அதனால அவங்க மயக்கமாகி... அப்புறமா கண் முழிச்சதும் அவங்க உடம்புல அப்படியரு வலி..! உணவுல மயக்க மருந்தைக் கலந்துகொடுத்து, சில போலீஸ் மிருகங்கள் அந்தப் பெண்ணை வேட்டையாடியிருக்கு. அந்த வேதனையையும் அவமானத்தையும் தாங்கிக்க முடியாம, மனசு உடைஞ்சுதான் அவர் தற்கொலை பண்ணிக்கிட்டிருக்காங்க. இதை நாங்க சும்மா விடப்போறதில்ல...'' என்று கொந்தளித்தார்.

திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியிடம் பேசினோம். ''ஈழத்தில் தங்கள் மானத்தையும் உயிரையும் காப்பாற்றிக்கொள்ள முடியாமல்தான் அகதியாக நம் நாட்டை நம்பி அடைக்கலம் தேடிவர்றாங்க அங்குள்ள தமிழர்கள். அப்படி வந்த ஒரு பொண்ணை போலீஸ்காரங்க மனிதாபிமானமே இல்லாம அரக்கத்தனமா சீரழிச் சிருக்காங்க. தமிழ்நாட்டின் பண்பு இதுவா?! இந்தக் கொடுமையை எதிர்த்து கரூர்ல போராட்டம் நடத்த அனுமதி கேட்டோம். போலீஸ் அனுமதி தரலை. அனுமதி கொடுக்காததால நாங்க அடங்கிப் போயிட்டோம்னு நினைக்கவேண்டாம். பத்மாதேவி தற்கொலைக்குக் காரணமான காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும்வரை எங்கள் போராட்டம் ஓயாது..!'' என்று ஆவேசப்பட்டார்.

பசுபதிபாளையம் போலீஸ் வட்டாரத்தில் இதுபற்றி பேசியபோது, ''ரெண்டு சின்னக் குழந்தைகளை பணத்துக் காக துளிகூட இரக்கமில்லாமல் கொலை செஞ்ச வழக்குல, மூணு வருஷமா தேடி குற்றவாளிகளைக் கைது செஞ்சோம். அதுல தலைமறைவாகியிருந்த இன்னொரு குற்றவாளியான கனகுவை தேடிப் போனபோதுதான் அவன் பத்மாதேவி வீட்டுப் பக்கமா தப்பி ஓடியதைப் பார்த்தோம். அதனால, அந்தப் பொண்ணை விசாரிச்சா ஏதாவது 'க்ளூ' கிடைக்கும்னுதான் விசாரிக்கக் கூட்டிவந்தோம். அதை கூட்டிட்டு வந்ததுல இருந்தே, தன்புருஷன் குமாரை நினைச்சு அழுதுட்டே இருந்துச்சு. 'அவனை நல்லவன்னுதான் கல்யாணம் பண்ணிட்டு வந்தேன். இப்படி கொலைகாரனா இருப்பான்னு தெரியாம போச்சுங்களே... பாவி, என்னை போலீஸ் ஸ்டேஷன் வரை கொண்டுவந்துட்டானே...'ன்னு புலம்புச்சு. அந்த மன வருத்தத்துலதான் வீட்டுக்குப் போனதும் தீக்குளிச்சிருக்கணும். மத்தபடி, அந்தப் பொண்ணை சீரழிச்சதா சொல்றதெல்லாம் அபாண்டம். முரட்டு பெல்ட்டும் காக்கிச் சட்டை யும் போட்டிருக்கும், எங்களுக்கும் மனசாட்சி இருக்குங்க...'' என்றனர்.

கரூர் மாவட்ட எஸ்.பி-யான தினகரனிடம் பேசிய போது, ''இரட்டைக் கொலை வழக்கு சம்பந்தமான விசாரணைக்காகத்தான் பத்மாதேவியை அழைச்சுட்டு வந்திருக்காங்க. விசாரணை முடிஞ்சதும் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. 'வயித்து வலி தாங்காமதான் தற்கொலை பண்ணிக்க முயன் றேன்'னு அந்தப் பொண்ணே நீதிபதிகிட்ட தன் மரண வாக்குமூலத்துல சொல்லியிருக்கு. அப்படி இருக்கும்போது, போலீஸ்காரங்க கெடுத்துட் டாங்கன்னு எதுக்கு வீண்பழி போடுறாங்கன்னு புரியலை...'' என்றார்.

ஆனால், சேலத்தைச் சேர்ந்த 'குடியுரிமை பாதுகாப்பு நடுவ'த்தின் வழக்கறிஞர் தமயந்தியோ, ''பத்மாதேவி தீக்குளிச்சு மருத்துவமனையில உயிருக்குப் போராட்டிட்டு இருந்த சமயத்துல, நான் போய்ப் பார்த்தேன். அந்தப் பொண்ணு என்கிட்ட, 'போலீஸ்காரங்க என்னை அடிச்சு உதைச்சு சித்ரவதை செஞ்சாங்கம்மா. உன் புருஷன் ஜெயில்ல இருந்து வர்றதுக்குள்ள உன் குடும்பத்தையே இல்லாம பண்ணிடுவோம்னு சொல்லிட்டு, என் புடவையை உருவிட்டாங்க. அதுக்கப்புறம் என் வயித்து மேல எட்டி உதைச்சாங்க. வலி தாங்காம நான் மயங்கி விழுந்துட்டேன். அதுக்கு பிறகு என்ன நடந்துச்சுன்னே எனக்குத் தெரியல. மயக்கம் தெளிஞ்ச பிறகு என் அடி வயித்துல பயங்கரமான வலி...'ன்னு சொல்லிக் கதறி அழுதாங்க. இதை நான் வீடியோவுலயும் பதிவு பண்ணி இருக்கேன். சேலையை உருவிய போலீஸ்காரங்க, அதுக்குப் பிறகு என்ன செஞ்சுருப் பாங்கன்னு யூகிக்க முடியாதா? பத்மாதேவி போலீஸாரால் பலாத்காரம் செய்யப்பட்டுதான் சீரழிக்கப்பட்டிருக்காங்க. இந்த விஷயம் வெளியே தெரிஞ்சுடக் கூடாதுன்னுதான் அந்தப் பொண்ணோட உடலைப் புதைக்கக்கூட விடாம, போலீஸ்காரங்க பிடிவாதமா வற்புறுத்தி மின் மயனாத்துல எரிச்சுருக்காங்க!'' என்றார் கொந்தளிப்பாக.

No comments:

Post a Comment