Sunday, May 2, 2010

யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறும் பணம்: வலம்புரி



வாழ்க்கைச் செலவு தலைக்குமேல் ஏறிவிட்டது. ஒரு குடும்பத்தில் எல்லோரும் உழைத்தால் மட்டுமே நாளாந்தச் செலவை ஈடு செய்ய முடியும் என்ற நிலையில், தனித்து குடும்பத் தலைவனின் உழைப்பில் வாழும் குடும்பங்கள் சீவ னோபாயத்திற்கே அல்லல்படும் அவலநிலை துன்பம் தருவதாகும்.

இந்நிலைமையானது வன்னியில் இருந்து அனைத்து உடைமைகளையும் இழந்து வெறுங்கையோடு வெளியேறிய மக்களையும்,

எந்தவித வேலைவாய்ப்பும் இல்லாத யாழ்ப் பாண குடாநாட்டையும் மிக மோசமாகப் பாதித்துள்ளது. ஏ-9 பாதை திறக்கப்பட்ட பின்னர், யாழ்ப்பாணத்தை நோக்கி வங்கிகளும், நிதிக் கம்பனிகளும் படையயடுத்து தளம் அமைப்பதும் தென்பகுதி மக்கள் வியாபாரப் பண்டங்களுடன் இங்கு இடம்பிடித்து விற்பனை செய்வதுமான நடவடிக் கைகள் மட்டுமே நடந்தேறுகின்றன. இதனால் யாழ்ப்பாணக் குடாநாட்டின் ‘பணம்’ வெளியேறும் நிலையே காணப்படுகின்றது.

இதேநேரம் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களும், சேமிப்பு, முதலீடு என்ற பக்குவ நிலையின்றி பணத்தை தாராளமாக செலவிடுவதே உயர்ந்த வாழ்வின் அடையாளம் என்ற நினைப்போடு செயற்படுகின்றனர்.

இதற்கு மேலாக தொலைபேசிப் பாவனை யும் அதனால் ஏற்படக்கூடிய செலவும் தாராளம்; ஏராளம்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஒரு நாளில் எவ்வளவு இலட்சம் ரூபாய் தொலைபேசியின் ஊடாக எங்களை விட்டுச் செல்கின்றதென்னும் ஆய்வினை யாரேனும் மேற்கொள்வார்களாயின் அதன் முடிபு பேரதிர்ச்சி தருவதாகவே அமையும். கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் இடம் பெறும் தொலைபேசி உரையாடலானது பொருளாதார சேவையுடன் சம்பந்தப்பட்டதாகும்.

அதாவது ஒரு நிமிடத் தொலைபேசி உரையாடல் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இலாபத்தைக் கூடத் தருவதாக இருக்கும். இதுபோல்தான் வளர்ச்சி கண்ட நாடுகளிலும் தொலைபேசி பாவனை என்பது பொருளாதார செயற்பாட்டுடன் தொடர்புபட்டதாக இருப்ப தால் அது இலாபம் ஈட்டலுடன் சம்பந்தப்படுகிறது. ஆனால் எங்கள் யாழ்ப்பாண மண்ணில் நிலைமை அப்படியல்ல. தெரிந்த தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அரட்டை அரங்கம் நடத்துவ தாகவே உள்ளது. இதனால் எந்த இலாபத்தை அடைய முடியும்?

ஆக, யாழ்ப்பாணக் குடாநாடு சும்மா இருந்து கொண்டு ஏற்கனவே கையிருப்பில் உள்ள பணத்தை செலவிட்டு சீவியம் நடத்துகிறது. ஒரு சில ஆண்டுகள் கடந்தால், பணத்திற்கான தட்டுப்பாடு பலரை பஞ்சத்திற்குள் தள்ளிவிடும். இந்த உண்மை மனப்பூர்வமாக உணரப்பட வேண்டும்.

No comments:

Post a Comment