Monday, May 3, 2010

‘ஹெட்ஜ் பண்ட்’ மோசடியிலும் நித்யானந்தா?

பெங்களூர் : அன்னியச் செலாவணி, ஹவாலா மோசடியிலும் சிக்கியுள்ளதாக விசாரிக்கப்பட்டு வரும் பாலியல் சாமியார் நித்யானந்தா, அமெரிக்காவில், பங்கு முதலீட்டு விவகாரங்களிலும் மோசடி செய்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக விசாரிக்கவும் அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பிடதியில் தலைமை ஆசிரமத்தை வைத்துள்ள நித்யானந்தா, பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதை தொடர்ந்து, அவர் செய்துள்ளதாக சந்தேகிக்கப்படும் பல்வேறு மோசடிகள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
பக்தர்களிடம் இருந்து அவர் பெற்றுள்ள பல கோடி ரூபாய் பணம், எதில் எல்லாம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று விசாரணை நடந்து வரும் நிலையில், அவர் அன்னியச் செலாவணி, ஹவாலா மோசடிகளிலும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில், இரு நிறுவனங்கள் நித்யானந்தா பெயரில் நடத்தப்பட்டு வந்துள்ளது இப்போது தெரிய வந்துள்ளது. நித்யானந்தா இன்வெஸ்ட்மென்ட் பண்ட் என்ற லிமிடெட் பார்ட்னர்ஷிப் கம்பெனி ஒன்றும், நிதியானந்தா கேபிடல் மேனேஜ்மென்ட் கம்பெனி என்ற நிறுவனமும் நடத்தப்பட்டு வந்துள்ளன.
இதன் நிர்வாக இயக்குனர்கள் பட்டியலில் நித்யானந்தா பெயரும் இருப்பதாக தெரிய வந்துள்ளதை அடுத்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இரு கம்பெனிகளும், ‘ஹெட்ஜ் பண்ட்’ நிதி நிர்வாகத்தை கையாளும் நிறுவனங்கள். ஹெட்ஜ் பண்ட் என்பது, தனி நபர்கள், நிறுவனங்களிடம் இருந்து முதலீட்டு நிதியை திரட்டி, அதை பங்குச்சந்தையில் முதலீடு செய்வது, பங்குகளை வாங்கித்தருவது, அதன் மீது லாபத்தை ஈட்டுவது, வர்த்தகத்தில் முதலீட்டு பணத்தை செலுத்தி, லாபம் சம்பாதிப்பது, குறிப்பிட்ட கம்பெனிகளின் பங்குகளை வாங்கி, அதன் வர்த்தக நடவடிக்கைகளை நிலைகுலைய வைப்பது போன்றவற்றில் ஈடுபடுத்துவது.
நித்யானந்தா, தன் அமெரிக்க பக்தர்களிடம் இருந்து பல கோடிகளை முதலீடாக பெற்று பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்; அதன் மூலம் வேறு வித அன்னியச் செலாவணி மோசடிகளிலும் ஈடுபட்டுள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பெங்களூர் நகரில் தியான பீட அறக்கட்டளை, நித்யானந்த தியானபீடம் என்று இரு அறக்கட்டளைகளை அவர் நடத்தி வந்துள்ளார். இதில் இருந்து பல கோடி பணம், அமெரிக்கவில் நடத்தப்பட்டு வந்துள்ள ஹெட்ஜ் பண்ட் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளாரா அல்லது அந்த நிறுவனங்களின் பெயரில் பணம் பெற்று, வேறு சட்டவிரோத பயன்பாட்டுக்கு கையாண்டு வந்துள்ளாரா என்றும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பான தகவல்கள் இன்னும் தெளிவாக வெளிவரவில்லை. அமலாக்கத் துறை விசாரிக்கும் போது, இன்னும் பல திடுக்கிடும் தகவலகள் வெளிவரலாம்.

No comments:

Post a Comment