Monday, May 10, 2010

அரசமைப்பு திருத்தங்கள் குறித்த யோசனைகளுக்கு இரு வாரங்களில் அங்கீகாரம் பெறப்படும் : மைத்திரிபால சிறிசேன







அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பான யோசனைகள் இன்னும் இரண்டு வாரங்களில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்படும். அதனையடுத்து, அவை ஜூன் மாதமளவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

17 ஆவது திருத்தச் சட்டம், உள்ளூராட்சிமன்ற தேர்தல் முறைமை செனட் சபை போன்ற விடயங்கள் தொடர்புபட்ட யோசனைகளே இவ்வாறு சமர்ப்பிக்கப்படவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது :

"நாட்டைத் துரித கதியில் அபிவிருத்தி செய்யும் நோக்கிலேயே நாங்கள் அரசியலமைப்பில் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டுவருகின்றோம்.

அந்த வகையில் நாட்டின் தற்போதைய அரசியலமைப்பில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் தற்போது விரிவாக ஆராயப்பட்டு வருகின்றது.

அரசியலமைப்பு மாற்ற விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்கும் அவை தொடர்பான திட்ட வரைபுகளை மேற்கொள்ளவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக்குழு விடயங்களை ஆராய்ந்துவருகின்றது.

அதன்படி இன்னும் இரண்டு வாரங்களில் புதிய திருத்தங்கள் தொடர்பான யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வோம். அதன் பின்னர் அவற்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்போம்.

நாடாளுமன்றத்தில் இடம்பெறும் விவாதங்களின்போது சகல கட்சிகளும் இவை தொடர்பில் தமது யோசனைகளையும் கருத்துக்களையும் வெளியிடலாம். முக்கியமாக எதிர்க்கட்சி யோசனைகளை வெளியிடலாம்.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் முறைமையிலும் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டியுள்ளது.

குறிப்பிட்ட பிரதேசத்துக்கு நேரடியாக பொறுப்புக் கூறும் வகையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவேண்டும்.

அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தச் சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக கடந்த காலங்களில் தெரிவிக்கப்பட்டது. எனவே அதனூடாக உருவாக்கப்படும் ஆணைக் குழுக்களுக்கு அதிகளவில் அதிகாரங்கள் கிடைக்கும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

அதாவது ஆணைக்குழுக்களின் கட்டமைப்பில் மாற்றங்களை கொண்டுவர எதிர்பார்க்கின்றோம்."

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment