Thursday, June 3, 2010

ஜனாதிபதி தலைமையிலான குழு தமிழ் கூட்டமைப்புடன் திங்களன்று பேச்சு







ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் எதிர்வரும் ஏழாம் திகதி திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக அரசாங்க வட்டாரங்களிலிருந்து நம்பகமாகத் தெரியவருகிறது.

பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்கான உத்தியோகபூர்வ அழைப்பு இன்று வெள்ளிக்கிழமை கூட்டமைப்புக்கு அனுப்பப்படும் சாத்தியம் உள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டார். இதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்க தரப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் முக்கிய அமைச்சர்கள் சிலரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வார்கள் என்றும் சிரேஷ்ட அமைச்சர் கூறினார். மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என அறிய முடிகின்றது.

அரசாங்க பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின்போது அரசியல் தீர்வுத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி வேலைத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்படும் என்று தெரியவருகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் எட்டாம் திகதி செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் ஏழாம் திகதி திங்கட்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளமை விசேட அம்சமாகும் எனக் கருதப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த எதிர்பார்ப்பதாக அரசாங்கம் கூறிவந்த நிலையில் அரசாங்கத்துடன் பேச்சு நடத்தத் தயார் என்று தமிழ்க்கூட்டமைப்பு அண்மையில் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ததாக தெரியவருகின்றது.

அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தனுடன் அண்மையில் உத்தியோகப்பற்றற்ற முறையிலான பேச்சுவார்த்தை ஒன்றில் தான் ஈடுபட்டதாகவும் இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தார்.

மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை விரைவில் சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்றும் வெளிவிவகார அமைச்சர் கூறியிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பல விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது என்றும் கூட்டமைப்புக்கு இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் திறந்த அழைப்பு ஒன்றையே விடுத்துள்ளது எனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடைபெறுகின்ற முதலாவது சந்திப்பு இதுவாகும். இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் அங்கு பிரதமர் உட்பட முக்கியஸ்தர்கள் பலருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர். இந்த பேச்சுவார்த்தைகளின்போது இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் விரிவாக ஆராயப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இனப்பிரச்சினைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்வுத்திட்டம் ஒன்றினை தயாரித்துள்ளதாகத் தெரியவருகின்றது. இந்த தீர்வுத்திட்டம் குறித்து இந்திய மத்திய அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்க் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையிலேயே புதுடில்லிக்கான ஜனாதிபதியின் விஜயம் அமையவுள்ளது.

இந்திய தலைவர்களுடனான பேச்சுக்களுக்கு முன்னோடியாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்க் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment