Thursday, June 3, 2010

பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டியது போன்று புலம்பெயர் தமிழரின் நடவடிக்கைகளை நாம் வெற்றிகரமாக முறியடிப்போம் செய்தியாளர் மாநாட்டில் கெஹலிய ரம்புக்வெல




புலம்பெயர் தமிழ் சமூகத்தின், இலங்கைக்கு எதிரான செயற்பாடுகள் ஓரளவு வெற்றி பெற்றுள்ளன. ஐ.நா. மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் சமீபத்திய அறிவிப்பும் அதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். எனினும் இலங்கையில் பயங்கரவாதத்தை கூண்டோடு ஒழித்துக்கட்டியது போன்று புலம் பெயர் தமிழ் சமூகத்தின் நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக முறியடித்திடுவோம்.
அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில், செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோது இவ்வாறு தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:
"ஐபா' திரைப்பட விழாவுக்கு அழைப்பு விடுக்கும் போது பெரும்பாலும் இந்திய நடிகர்கள் அனைவரும் வருவதில்லை. முன்னைய வருடங்களில் தென்னாபிரிக்கா, லண்டன் போன்ற நாடுகளில் நடைபெற்ற ஐபா திரைப்பட விழாக்களிலும் பெரும்பாலானோர் கலந்துகொள்ளவில்லை. எனவே, புலம்பெயர் தமிழ் சமூகத்தின் எதிர்ப்பு நடவடிக்கைகள் இதற்குக் காரணமென்று கூறமுடியாது.
உலகம் முழுவதும் 8கோடி 50 லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களுல் இரண்டு சத வீதத்தினர் இலங்கைக்கு எதிராகச் செயற்பட்டாலும் அது ஒரு பெரும் எண்ணிக்கைதான்.
இவர்களின் செயற்பாடுகள் சில வெற்றியளித்துள்ளன என்பதையும் மறுக்க முடியாது. சமீபத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை இலங்கைக்கு எதிராக வெளியிட்ட கருத்து இதற்கு சிறந்த உதாரணமாகும்.
புலம்பெயர் தமிழ் சமூகத்தின் நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கருத்து வெளியிட்டிருந்தார்.
உள்ளூரில் பயங்கரவாதத்தை ஒழித்து அவர்களது இருப்பிடங்களை நாசமாக்கியதுபோல், புலம்பெயர் தமிழ் சமூகத்தின் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளையும் வெற்றிகரமாக முறியடிப்போம். இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
"ஐபா' திரைப்பட விழாவுக்கு பொலிவூட் நடிகர்கள் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், சாருக்கான் ஆகியோர் திட்டமிட்டபடி வருகை தராதமைக்கு புலம்பெயர் தமிழ் சமூகத்தின் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் காரணமா என செய்தியாளர் ஒருவர் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment